பக்கம் எண் :

உரைநடையில் கவனிக்க வேண்டுவன 393


விலக்குதல் நல்லது. ‘பல விலைகள்’ என்னும் சொற்றொடர்க்குப் பல
இலைகள் என்று பொருள் இருக்குமானால் ‘பல இலைகள்’ என்றே
பிரித்தெழுதுக. ‘நானூறு’ என்பது ‘நான் நூறு’ என்று பொருள்
கொள்வதாயிருந்தால் பிரித்தே எழுதுக.

மொழிநடை : மொழிநடை பலவகையாக இருக்கலாம்.
அவரவர் திறமைக்கும் பழக்கத்திற்கும் அறிவுடைமைக்கும் ஏற்றவாறு
மொழிநடை அமையும். பொதுவாகப் பயன்படுத்துவதற்கு எளிய
மொழிநடையே இன்று வேண்டுவது. மொழிநடையைக் குறித்துத்
தமிழ் அறிஞர் பெருமக்கள் கீழே கூறியிருப்பது காண்க.

தண்டமிழ் மொழிக்கு அரும் பெருந் தொண்டாற்றிய
பேரறிஞர் தக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள்
1933-ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடந்த
தமிழன்பர் மாநாட்டில் நிகழ்த்திய பேருரையில் உரை நடையைப்
பற்றிக் கூறியதைப் படியுங்கள். அவர் கூறியதாவது:

‘‘......தமிழ் வசனநடையை ஒருவகைப்படுத்த விரும்பும்
அன்பர்கள், எழுதும் மொழி வேறாக இருக்கிறதே என்று
எண்ணுவதிற் பயனில்லை. பிழையின்றி இயன்ற வரையில் யாவருக்கும்
விளங்கும் வார்த்தைகளையே எழுதும் பழக்கத்தை மேற்கொள்வது
நல்ல முறையாகும். வழக்காறற்ற சொற்களையும் திரிசொற்களையும்
வசன நடையில் கூடிய வரையில் விலக்குதல் நன்று. தம் கருத்தை
மற்றவர்கள் எளிதில் அறிந்து பயனுற வேண்டுமென்பதை
எழுதுபவர்கள் மனத்திற்கொண்டு எழுதுவதுதான் பயனை
அளிக்கும். பேசினாலும் எழுதினாலும் கருத்தை அறிவிக்கும்
நோக்கத்தை முக்கியமாகக் கொள்ள வேண்டுமேயன்றிக் கடுமையான
நடையைக் கைக்கொள்ளுதல் கூடாது; கைக் கொண்டால், ‘தமிழே
கடினமானது’ என்னும் எண்ணம் தமிழ் மக்களுக்கு உண்டாகிவிடும்.”

- தமிழன்பர் மாநாட்டுத் தலைமையுரை.