பக்கம் எண் :

வாழ்க்கை வரலாறு எழுதும் முறை 445


தனிப்பட்ட ஒருவரது வாழ்க்கையை விவரிக்கும். கார்லைல் என்ற
ஆங்கிலப் பேரறிஞர் ‘கணக்கற்ற வாழ்க்கை வரலாறுகளின் சாரமே
நாட்டு வரலாறு’ என்று நாட்டு வரலாற்றுக்கு இலக்கணம் கூறினாலும்,
அக்கருத்து ஒப்பக் கொள்ளத் தக்கதன்று.

வாழ்க்கை வரலாற்றில் நாம் எதிர்பார்ப்பது ஒருவரது உண்மை
வாழ்க்கையேயாகும். வாழ்க்கை வரலாறு என்பது ஒருவரது
உண்மையான வாழ்க்கைப் படமாக அமைய வேண்டும். உண்மைக்கு
மாறுபட்ட செய்திகள் இதில் இடம் பெறுமாயின், இது கற்பனைக்
கதையாகவே மாறிவிடும். வாழ்க்கை வரலாற்றில் விருப்பினால்
இல்லாததைக் கூட்டிக் கூறுவது கூடாது; வெறுப்பினால் உள்ளதை
மறைத்து விடுவதும் கூடாது. ஒருவர் தலைசிறந்து சீரும் சிறப்புமாக
வாழ்ந்தார் என்று எழுதும்போது, அவருடைய நிறையையும்
குறையையும் வெளியிடுவதால் தவறு ஒன்றும் ஏற்பட்டு விடாது.
ஒருவர் சமுதாயத்தில் எவ்வாறு வாழ்ந்து வந்தார் என்றும், அவர்
எவ்வாறு அன்றாட வாழ்வில் நடந்து கொண்டார் என்றும், அவருடைய
விருப்பு வெறுப்புகள் எவை என்றும், அவர் வாழ்க்கைப்
போராட்டத்தில் எம்முறையைக் கொண்டு வெற்றியுற்றார்
என்றும், எக்காரணத்தால் அவருக்குத் தோல்வி ஏற்பட்டது என்றும்,
எப்படிப் பெருநூலை இயற்றினார் அல்லது அரிய தொண்டாற்றினார்
என்றும் நாம் தெரிந்து கொள்ளவே வாழ்க்கை வரலாற்றைப்
படிக்கிறோம். சொல்பவை உண்மைக்கு மாறாக இருக்குமானால்,
நாம் எப்படி அவற்றை நம்பமுடியும்? பாஸ்வல் என்பவர்,
ஆங்கிலப் பெரும் புலவரான ஜான்சன் வரலாற்றை உண்மைக்கு
மாறுபடாமல் நேர்மையாக ஜான்சனுடைய குறைகளை மறைக்காமலும்
நற்பண்புகளை மிகைப்படுத்திக் கூறாமலும் இயற்றிய காரணத்தால்,
உலகமே இன்று பாஸ்வல் என்பவரை ஒப்புயர்வற்ற வாழ்க்கை
வரலாற்றாசிரியர் என்று பாராட்டுகிறது. அந்நூலைப் படித்தவர்கள்
இவ்வுண்மையை நன்று அறிவார்கள். ஒருவர் பாஸ்வல் இயற்றிய