பக்கம் எண் :

448நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


உருவாகிய முறை, இளமைப்பருவம், செய்த வேலை, ஆற்றிய
தொண்டுகள், வாழ்க்கையின் மாலைக்கால வாழ்வு, தோற்றம், நற்பண்புகள்,
தீய பண்புகள் இவற்றைக் கற்பனை கலவாது படிப்பார் உள்ளம்
கவரும் முறையில் எழுத வேண்டும்.

‘என் வரலாறு’ என்பது வாழ்க்கை வரலாற்று வகையைச்
சேர்ந்தது. வாழ்க்கை வரலாறு
(Biography) பிறரால் எழுதப்படுவது;
என் வரலாறு
(Autobiography) என்பது, எழுதுகின்றவரே தம்
வரலாற்றைக் கூறுவது. நேர்மை உள்ளம் படைத்தவரே ‘என் வரலாறு’
எழுதுதல் கூடும். உண்மையைக் கூற வெட்கப்படாத அறிஞர் பெருமக்களே
‘என் வரலாறுகளை’ இயற்ற வல்லவர்கள். வாழ்க்கை வரலாற்றைவிட
‘என் வரலாறு’ எழுதுவது மிகமிகக் கடினமானது. தமிழ் மொழியில்
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களும், திரு. வி. கலியாணசுந்தரனாரும்
‘என் வரலாறு’ நூல்களை இயற்றியுள்ளார்கள். இவர்கள் இருவரும்
தங்கள் வறுமை நிலைகளையும் கற்ற முறைகளையும் இவை போன்ற
பலவற்றையும் நேர்மையாக எழுதியிருக்கிறர்கள். மேலை நாட்டு
மொழிகளில் இத்தகைய நூல்கள் பலப்பல உள்ளன.

‘வாழ்க்கை வரலாறு’ எழுதுபவர்களும் ‘என் வரலாறு’
இயற்றுபவர்களும் நல்ல தமிழில் எளிய நடையில் எழுத வேண்டும்
என்பதை என்றும் மறத்தலாகாது. நல்ல உண்மை வரலாறு
வாழ்க்கையை உயர்த்தும் நல்லமுதம். உண்மை வாழ்க்கை
வரலாறுகளே தண்டமிழ் உலகில் உலவ நாம் முயலவேண்டும்.