எழுதுவர்; பலர் நகைச்சுவை பட்டுப்போகுமாறு எழுதுவர்.
நகைச்
சுவையுற எழுதுவது ஒரு சிலர்க்கே இயற்கையாக அமைந்த திருவாகும்.
அத் திரு அமையப் பெற்றவர் நகைச்சுவையுறக் கட்டுரையோ கதையோ
நல்ல தமிழில் எழுதப் பயிற்சி பெறலாம்.நகைச்சுவையை வடமொழில்
‘ஹாஸ்யம்’ என்பர். தொல்காப்பியர் தமது இலக்கண நூலில் எட்டு
வகை மெய்ப்பாடுகளுள் நகுதலை ஒன்றாகக் கூறியுள்ளார்.
பொருள்பற்றி நகைச்சுவை நான்காகும். தொல்காப்பியம்,
‘‘எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப”
என்று கூறுகிறது. எள்ளுதலும் இளமையும் பேதைமையும் மடனும்
எனக் கருதப்பட்ட நகை நான்கு என்பது இந்நூற்பாவின் பொருள்.
இவை நான்கும் ஒன்று இரண்டாகி எட்டு ஆதலும் உடைய. எள்ளல்
என்பது இகழ்ச்சி; இது தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால்
எள்ளப்பட்ட வழித் தான் நகுதலும் என இரண்டாகும். இளமை
என்பது தான் இளமையாற் பிறரை நகுதலும் பிறர் இளமை கண்டு
தான் நகுதலும் என இரண்டாகும். பேதைமை என்பது அறிவின்மை.
இது தன் பேதைமையால் நகுதலும் பிறன் பேதைமையால் நகுதலும்
என இரண்டாகும். மடமை என்பது பெரும்பான்மையும் கொளுத்தக்
கொண்டு கொண்டது விடாமை. இதுவும் தன் மடமையால் நகுதலும்
பிறன் மடமையால் நகுதலும் என இரண்டாகும். ‘எள்ளல்’ என்பது நகை
மொழி அல்லது கேலி. இஃது இழித்தலின் வேறுபட்ட நகைமொழி;
பழிப்பில் பரிகாசம்; விளையாட்டு ஏச்சுப் பேச்சு. இளமை என்பது
பிள்ளைத் தன்மை. பேதைமை என்பது அறிவின்மை
(Stupidity);
மடன்
என்பது ஐயுறாது எளிதில் நம்பும் இயல்பு
(Simplicity of innocence).
இவ்வாறு டாக்டர்
S.
சோமசுந்தர பாரதியார்
தமது மெய்ப் பாட்டியல்
புத்துரையில் விளக்கியுள்ளார்.
|