|
சங்கம் மருவிய நூல்களில் மேற்குறித்த வகையில் நகைச்
சுவையை உய்த்தறியுமாறு வைத்தார்கள் பண்டைக்கவிஞர்கள்.
இடைக்காலத்திலும் அவ்வாறே காண்கிறோம். பிற்காலத்தில்
புலவர்கள் நகைச்சுவை வெளிப்படத் தோன்றுமாறு பல
பாடல்கள் இயற்றியுள்ளார்கள். பல பொருள் தரும்
சிலேடையணியாலும் சொற்சாதுரியத்தாலும் இடைக்காலப்
புலவர்கள் நகைச்சுவையைக் காட்டினார்கள்.
திருவள்ளுவர்,
‘‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்”
என்னும் குறட்பாவால் கயவரை-கீழ்மக்களை-புகழ்வது போல நகைச்
சுவையுற இகழ்வதைக் காணலாம். வஞ்சப் புகழ்ச்சியணியால் இங்கு
நகைச்சுவை தோன்றுகிறது. ‘காசாலேசா’ என்னும் தொடருக்குக் ‘காசா,
லேசா’ என்றும், ‘காசாலே சா’ என்றும் பொருள் கொள்ளலாம்.
இப்படி
இருபொருள் வரச்சொல்லி நகைச்சுவை தோன்றுமாறு
செய்வதுண்டு
புத்தியில்லாதவன் என்னும் தொடரைப் புத்தி
இல்லாதவன் என்று
பிரித்து அறிவில்லாதவன் எனவும், புத்தியில் ஆதவன் என்று பிரித்து
அறிவில் சூரியன் போன்றவன் எனவும் பொருள் வருமாறு செய்து
நகைச்சுவை பிறப்பிக்கலாம்.
பிற்காலப் புலவர்கள் கருத்தினாலும் நகைச்சுவை தோன்றப்
பாடியது உண்டு. காளமேகப்புலவர் விகடராமன் குதிரையைக்
குறித்து,
‘‘முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டுபேர் தள்ள-எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம்போம் காத வழி”
|