பக்கம் எண் :

நகைச்சுவை இலக்கியம் எழுதுதல் 453


புறக்கணிக்கலாகாது. நல்ல தமிழில் நகைச்சுவைக் கட்டுரைகள்
வாராமையால், அறிஞர்கள் வந்தவற்றையும் உயர்வாகக் கருதவில்லை.
இன்று சிலர் நகைச்சுவை ததும்ப எழுதி வருகிறார்கள். ‘நாடோடி’
இத்துறையில் நல்ல தொண்டாற்றியுள்ளார் எனலாம்.

நகைச்சுவை எழுத்தாளர்களிடத்தில் காணப்படும் குறை, நல்ல
தமிழில் எழுதாமையேயாகும். பேச்சு மொழியிலே எழுதினால்தான்
நகைச்சுவை தோன்றும் என்று மட்டும் எண்ண வேண்டுவதில்லை.
நல்ல தமிழில் பிழையற எழுதுவதனாலும் நகைச்சுவை உண்டாக்கலாம்.
ஆங்கிலத்தில் அடிசன், சார்லஸ் லாம்ப் போன்ற அறிஞர் பெருமக்கள்
எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் இன்றும் கல்லூரிகளில் பாடமாக
வைக்கப்படும் பெருமை பெற்றுள்ளன. தமிழ் மொழியிலும்
அத்தகைய பெருமையடையக் கூடிய முறையில் நகைச்சுவைக்
கட்டுரைகளும் கதைகளும் வருதல் வேண்டும். இயலாதா? இயலும்.

பெரும்பாலம் படித்த தமிழர்கள் மிகுதியாகச் சிரிக்க மாட்டார்கள்;
அருமையாகத்தான் சிரிப்பார்கள். இவர்கள் சிரிக்க வெட்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு நல்ல நகைச்சுவை இலக்கியங்கள் வாழ்க்கையில்
இன்பமூட்ட இன்றியமையாதவை. இதனால், நாளிதழ்களும் வார மாத
வெளியீடுகளும் நகைச்சுவைக் கட்டுரை களையும் கதைகளையும்
வெளியிட்டு வருகின்றன. பேசுவதிலும் இடையிடையே நகைச்சுவை
நல்ல முறையில் தோன்றுவது நல்லது.

நகைச்சுவை அமைய எழுத விரும்புகிறவர்கள் சமுதாயத்தைக்
கூர்ந்து நோக்கிக் கண்மூடிப் பழக்கங்களை நன்றாகக் கண்டு, அவை
மண்மூடிப் போகுமாறு செய்யும் முறையில், குறும்புப்படம்
வரைபவர்களைப் போன்று, கட்டுரைகளோ கதைகளோ தீட்ட
வேண்டும். நகைச்சுவை உண்டாக்க, உள்ளதை மிகைப்படுத்தலாகாது;