பக்கம் எண் :

நாடகம் எழுதும் நன்முறை 455


40.
நாடகம் எழுதும் நன்முறை

நாடகம் தலைசிறந்த நற்கலை, கற்றாரையும் கல்லாதாரையும்
நாடகம் மகிழ்விப்பதோடு அவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே
அறிவை ஊட்டவல்லதாகவும் பொழுது போக்குக்குரியதாகவும் இலங்கும்
நல்ல கலை. நாட்டிலே மக்களிடத்தில் புத்துணர்ச்சி மலரவும்
சீர்திருத்தக் கருத்துகள் பரவவும், சமுதாயத்தில் காணப்படும்
கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகவும் நாடகம் மிகமிகப்
பயன்படும். ஆதலால், தமிழ் மொழியில் நல்ல முறையில் அமைந்த
நாடகங்கள் பல தோன்றவேண்டும். நாடக ஆசிரியர்கள் சிந்தனை
செய்து நல்ல கருத்துகள் பொதிந்த நாடகங்களை உருவாக்க வேண்டும்.

தமிழ் மொழியில் இன்று மனோன்மணீயம் என்னும் நடிப்பதற்கு
முடியாத, ஆனால், படித்து இன்புறுதற்குரிய தலைசிறந்த, செய்யுள்
முறையில் அமைந்த நாடகம் ஒன்றே உண்டு. பழைய முறையில்
அமைந்து நாடகங்கள் இனிப் பயன்பட மாட்டா. புது வகையான
நாடகங்கள் தமிழில் இனித் தோன்ற வேண்டும்.

நாடகம் என்னும் சொல்லுக்குத் தமிழ் நூல்களில் கூத்து என்றும்,
இன்பம் என்றும், புனைந்துரை என்றும் பொருள் காண்கிறோம்.
சிலப்பதிகாரத்தில் கூறப்படுவது நாட்டியக்கூத்து. நாடக நன்னூல்
என்பது நடனத்தைப் பற்றிய நூலையே குறிப்பிடுகிறது.
திருக்கோவையாரில் கண்டவர் மகிழ்தல் என்னும் துறையில் அமைந்த
பாட்டில் ‘நன்பணைத் தண்நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே’
என்னும் அடி வருகிறது. தலைவனும் தலைவியும் செல்வது தேன்
உண்ணும் வண்டு போன்று இன்பம் பயக்கிறது என்பது அவ்வடியின்
கருத்தாகும்.