பக்கம் எண் :

நாடகம் எழுதும் நன்முறை 457


என்பவை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாம். முதலது ஐந்து
அங்கங்களையும், இரண்டாவது நூல் ஆறு அங்கங்களையும்
மூன்றாவது நூல் ஏழு அங்கங்களையும் கொண்ட இன்பியல் நாடகங்களாம்.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு அல்லது 6-ஆம் நூற்றாண்டிலிருந்த
காளிதாசர் வடமொழியில் சாகுந்தலம், மாளவி காக்கினி மித்திரம்,
விக்கிரமோர்வசியம் முதலிய நாடகங்களை இயற்றினார். இந்நாடகங்கள்
இன்றும் கிடைக்கின்றன.

பண்டைக் காலத்தில் தமிழ் மொழியில் நாடக நூல்கள்
தோன்றாமைக்குச் சமணரும் பௌத்தரும் காரணமாயினர் என்று
சிலர் கூறினார். அவர்கள் கூறியது பொருத்தமாகத் தோன்றவில்லை.
எப்படியோ இன்று நம்மிடத்தில் பண்டைத் தமிழ் நாடக நூல்கள்
இல்லை.

தமிழ் மொழியில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலே
‘இராஜராஜேஸ்வர நாடகம்’ தோன்றியதாயும், கி.பி. 12-ஆம்
நூற்றாண்டில் ‘பூம்புலியூர் நாடகம்’ இருந்ததாயும் கல்வெட்டுகளால்
அறிகிறோம். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ‘முக்கூடற் பள்ளு’ போன்ற
இசை நாட்டிய நாடகங்களும், 18-ஆம் நூற்றாண்டில் ‘குற்றலாக்
குறவஞ்சி’ போன்ற இசை நாட்டிய நாடகங்களும் எழுந்தன.
கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் ‘ஒட்ட நாடகம்’, ‘சோகி நாடகம்’,
‘இராம நாடகம்’, ‘பாரத நாடகம்’, ‘இந்திரசபா நாடகம்’, ‘டம்பாச்சாரி
நாடகம்’, ‘பிரமசமாஜ நாடகம்’ முதலிய நாடகங்கள் வெளிவந்தன.
இவற்றில் எல்லாம் நடிப்பை விடப் பாட்டுகளே முதன்மை யான இடம்
பெற்றன. 20-ஆம் நூற்றாண்டில் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்,
பம்மல் சம்பந்த முதலியார் ஆகிய இருவரும் நாடகங்களை எழுதித்
தமிழ் நாடகமேடையில் நடிப்பையே முதன்மையாக்கினர். பேராசிரியர்
சுந்தரம் பிள்ளை ஷேக்ஸ்பியரைப் பின்பற்றிப் படிப்பதற்குரிய
மனோன்மணீயம் என்னும் ஒப்புயர்வற்ற செய்யுள் நாடகத்தை
இயற்றினார்.