புணரியல் தவறுகள்
நன்னூற் துறை, தொழிற் துறை, கற்தூண், மக்கட்
தொகை-
இவை தவறானவை. நெடில்+தொடர் = நெடிற்றொடர் என்றாகும்.
இதுபோலவே நன்னூல்+துறை = நன்னூற்றுறை என்றும்
தொழில்+துறை =தொழிற்றுறை என்றும் கல்+தூண் = கற்றூண் என்றும்
ஆகும். மக்கள்+தொகை = மக்கட்டொகை என்றாகும். இத்தொல்லை
ஏன்? சந்தி சேர்க்காமலே நன்னூல் துறை, தொழில் துறை, கல் தூண்,
மக்கள் தொகை என்றே எழுதலாம்.
பன்+நெடுங்காலம் என்பது பன்னெடுங்காலம்
என்றாகும்.
மண் பானை என்றும், மண் சாலை என்றும் எழுதுவதுதான் மரபு.
கால்கள் என்பதைக் காற்கள் என்றும், தோள்கள் என்பதைத் தோட்கள்
என்றும் எழுதுவதில்லை. நூல்கள் என்பதை நூற்கள் என்றும்,
வாள்கள் என்பதை வாட்கள் என்றும் எழுதுவது மரபன்று. ஆதலால்,
நூல்கள், கால்கள், தோள்கள், வாள்கள் என்றே
எழுதுக.
பெரும்பாலோர் பந்தக்கால்
என்று திருமண அழைப்பில்
அச்சிடுகின்றனர். பந்தல்+கால்=பந்தற்கால்
என்றே வரவேண்டும்.
பந்தர்+கால் என்று கொண்டாலும் பந்தர்க்கால்
என்றே வரவேண்டும்
பந்தக்கால் என்று அச்சிடுவது தவறு. பந்தக்கால்
என்றால் பந்தத்தைக்
கட்டியுள்ள கால் என்றே பொருள்படும்.
என்+தன்=என்றன் என்றும், உன்+தன்=உன்றன் என்றும்.
எம்+தம்=எந்தம் என்றும், உம்+தம்=உந்தம் என்று வரும். ஆதலால்
எந்தன் என்றும் உந்தன் என்றும் எழுதுவது தவறு என்றறிக.
நந்நீராட்டு விழா - இது
தவறு.
நல்+நீராட்டுவிழா = நன்னீராட்டு விழா
என்றாகும்.
நற் தமிழ் - இது தவறு. நற்றமிழ் என
எழுதுக.
|