5.4
வினையியல் (ON VERB)
வினைச் சொல் : (Verb)
மொழிக்கு இன்றியமையாத உறுப்பு வினைச்சொல்லாகும்.
வினைச் சொல்லானது ஒரு பொருளின் புடை பெயர்ச்சியைக்
(Movement)
காட்டும். இப்புடை பெயர்ச்சி நடைபெற்றதாகவும் இருக்கலாம்;
கற்பனையாகவும் இருக்கலாம். வினைச் சொல், தெரியும்படியாகவாவது
குறிப்பாகவாவது காலத்தைக் காட்டும். இதனால், வினைச் சொல்லைப்
பொதுவாகக் காலக்கிளவி என்பர். வினைச் சொல்லுக்கு ஜெர்மன்
மொழியி்ல் Time-word (காலக் கிளவி) என்னும் பெயர் வழங்குகிறதாம்.
வினைச் சொல் வேற்றுமையை ஏற்காது. தமிழில் வினைச் சொற்களின்
தன்மைகளை நன்கு அறிந்தால் தான் மொழியில் வல்லவராதல்
இயலும்.
வினைச் சொல் தெரிநிலைவினை
(Verb indicating time) என்றும்
குறிப்புவினை (Symbolioc Verb) என்றும் இருவகைப் படும். பகுதி
வினைச் சொல்லாக இருந்தால் தெரிநிலை என்று கண்டு பிடிக்கலாம்.
ஓடினான் - இதில் ஓடு என்பது பகுதி. இது வினைச் சொல்.
ஆதலால், இது தெரிநிலை வினைமுற்று.
பகுதி பெயர்ச் சொல்லாயிருந்தால் குறிப்பு வினையென்று
கண்டு பிடிக்கலாம். பெயர்ச்சொல் என்பது பண்புப் பெயர்,
இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பொருட்பெயர் முதலியவற்றைக்
குறிக்கும்.
அவன் நல்லன் - நல்லன் என்பது நன்மை என்னும் பண்புச்
சொல்லடியாகப் பிறந்ததால் குறிப்பு வினைமுற்று.
|