பக்கம் எண் :

வினையியல் 93


வினையின் வகை - வினைமுற்று (Finite verb)

இவ்வினையானது முற்று என்றும், எச்சம் என்றும் இரு
வகைப்படும். கருத்து முற்றுப் பெற்றிருப்பது முற்றுவினை. இதனை
வினைமுற்று என்கிறோம். ‘பிறிதோர் சொல்லோடு இயையாது
தானே தொடராதற்கு (வாக்கியமாதற்கு) ஏற்கும் வினைச் சொல் முற்று’
என்பர் சேனாவரையர். இவ்வினைமுற்று முன்னே கண்டவாறு
தெரிநிலை வினைமுற்று எனவும் குறிப்பு வினைமுற்று எனவும்
இருவகைப்படும்.

காக்கை பறந்தது - பறந்தது என்பது தெரிநிலை வினைமுற்று
எப்படி? பகுதி வினைச்சொல். இது காலம் காட்டுகிறது. இதில் கருத்து
முற்றுப் பெற்றிருக்கிறது. ஆதலால், பறந்தது என்பது தெரிநிலை
வினைமுற்று.

காக்கை கரியது - கரியது என்பது குறி்பபு வினைமுற்று. ஏன்?
கருமை என்னும் பண்புச் சொல்லடியாய்ப் பிறந்தது கரியது என்பது.
இதில் கருத்து முடிந்திருக்கிறது. அது கரியதாயிருக்கிறது என்று
குறிப்பாய்க் காலம் காட்டுகிறது. எனவே, கரியது என்பது குறிப்பு
வினைமுற்று.

பெயரெச்சமும் வினையெச்சமும்

எச்சம் என்னும் சொல்லுக்கு இங்குக் கருத்து முற்றுப் பெறாது
எஞ்சியிருப்பது. அஃதாவது குறைவுபட்டிருப்பது என்பது பொருள்.
‘பிறிதோர் சொல் பற்றியல்லது நிற்றல் ஆற்றா வினைச் சொல் எச்சமாம்‘
என்பர் சேனாவரையர். வேறொரு சொல்லைத் தழுவாமல் நிற்க
இயலாத குறைவுபட்ட வினைச்சொல்லே எச்சம் எனப்படும்.
இவ்வெச்சம் பெயரெச்சம் என்றும் வினையெச்சம் என்றும் இருவகைப்படும்.

பெயரெச்சம்
(Relative Verbal Form)

உறங்கிய பையன் - உறங்கிய என்பது குறைந்த வினைச்சொல்.
எனவே, அஃது எச்சம் எனப்படும்