பக்கம் எண் :

126தமிழ் வரலாறு

ழகரம் பல சொற்களில் ககரமாகத் திரிகின்றது.

எ-டு: குழை-குகை, முழை-முகை, சுழியம்-சுகியன்,தொழுதி-தொகுதி, நிழல்-நிகர் = ஒளி, மழவு- மகவு.

ஒ.நோ: விழி-L. vigil, E. wake

லகர ளகரம் ழகரத்தின் இனமாகவும் அதனினும் மெலிந்தும் இருப்பதனால், ககரத்தின் மெலியாகிய ஆய்தமாகத் திரிந்தன.

வகரம் ககரமாவது பெருவழக்காதல் தெள்ளிது.

எ-டு: ஆவா-ஆகா, சிவப்பு-சிகப்பு, செவிள்-செகிள், துவர்- துகிர்.

ஆய்தம் ககர மெலியாதலின், வகரம் ஆய்தமாகத் திரிதலும் இயல்பே. இதற்கு வருமொழி முதற் ககரமும் துணைசெய்யும்.

அவ்+கடிய = அஃகடிய

இனி, இக்காலத்துச் சிலர் ஆய்தவெழுத்தைப் பிற தமிழெழுத்துகளின் முன்னும் பின்னும் இட்டு ஜ, ஷ, F, Z் முதலிய பிறமொழி யெழுத்துகளைக் குறிப்பது, தமிழியல்பிற்கும் மரபிற்கும் முற்றும் மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதும் ஆகுமென்றும், தமிழைப் பிற மொழிகட்குப் பிந்தியதாகக் காட்டுமென்றும், பிறமொழிச் சொற்களை யெல்லாம் தமிழெழுத்தி லேயே திரித்தெழுதுதல் வேண்டுமென்றும், அல்லாக்கால் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிதல் வேண்டும். ஆய்த வொலிக்குத் தமிழொலிகளை அயலொலி களாக மாற்றும் மந்திர வாற்றல் இல்லை. ஒலியைப் பொறுத்த மட்டில், ஆய்த வரிவடி வெழுதுவதும் அயன்மொழி வரிவடி வெழுதுவதும் ஒன்றே. எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரிவடிவன்று.

தமிழ் மிகத் தொன்மையும் முன்மையும் மென்மையும் வாய்ந்த மொழியாதலின், அதன் வல்லினமெய்களும் பிறமொழி வல்லின மெய்களை நோக்க மெல்வல்லினமே. இதைக் கால்டுவெலாரும் நோக்காது, தமிழ் வல்லினத்தை வடமொழி ஐவகுப்பின் முதல் வரிசைக் கொப்பாகக் கொண்டுவிட்டனர். தமிழ் வல்லின மெய்கள் இரட்டித்தா லன்றி ஆரிய வல்லினமெய்க்கு ஈடாகா.

எ-டு: ஆங்கிலம் தமிழ் வடமொழி தமிழ்
booking புக்கிங் kaka காக்கா

மேலும், தமிழ் வல்லின மெய்கள் பொலிவொலிகளும் (Voiced) ஆகா. பிற மொழிகளின் பொலிவொலிக்கும் பொலியாவொலிக்கும் (Voiceless)இடைப்பட்டதே தமிழ் வல்லினவொலி. அது இரட்டித்த