பக்கம் எண் :

30தமிழர் வரலாறு-2

வழிபடுவனவும், வெவ்வேறு மெய்ப்பொருளியல் கொண்டனவும், இல்லறத்தாலும் துறவறத்தாலும் வீடுபேறடைவனவுமான, சிவமதம் திருமால்மதம் என்னும் இருபெரு மதங்களையுடையவர்.

அவ்விரு மதங்களையும் ஆரியப்படுத்துவதற்கு, இறைவனின் முத்தொழிற் கொள்கையைப் பயன்படுத்தி, முத்தொழிற்கும் வெவ்வேறு தலைவர் உண்டென்றும், படைப்பவன் பிரமா என்றும், காப்பவன் திருமால் என்றும், அழிப்பவன் சிவன் என்றும் முத்திரு மேனிக் (திருமூர்த்திக்) கொள்கையை வகுத்துவிட்டனர் பிராமணர்.

பிரமா என்னும் சொல் பிரமன் என்னுஞ் சொல்லினின்று திரித்ததாகும். பிரமா பிராமணக்குல முதல்வன் என்பதும், அதற்கேற்ப நால்வரணங்களையும் அவற்றிற்குரிய குணங்களுடன் படைப்பவன் என்பதும் உட்கருத்து.

பிரமா மூவுலகும் அல்லது பல்லுலகும் படைப்பவன் என்று கொள்ளப்படினும், உண்மையிற் பிரமா பிராமணராற் படைக்கப் பட்ட செயற்கைத் தெய்வமே.

முத்திருமேனிக் கொள்கை வகுக்கப்பட்ட பின்பும், தமிழர் பிரமாவை வணங்காதும் ஒப்புக்கொள்ளாதும் முன்போற் சிவனை யும் திருமாலையுமே வணங்கி வந்திருக்கின்றனர். பிரமாவிற்குக் கோவிலும் வழிபாடும் இல்லாது போயின.

சிவனையும் திருமாலையும் ஆரியத் தெய்வங்களாகக் காட்டு தற்கு, வேதத் தெய்வங்களோடு அவரை இணைத்தனர். சூறாவளித் தெய்வமாகிய உருத்திரனைச் சிவனென்றும், கதிரவத் தெய்வமாகிய விட்டுணு (விஷ்ணு)வைத் திருமாலென்றும் கூறினர்.

சிவன் என்னுஞ் சொல்லை ஆரியச்சொல் லாக்குதற்கு, அதற்கு மங்கலமானவன் அல்லது நன்மை செய்பவன் என்று பொருள்கூறி, சிவ என்னும் குறிப்புப் பெயரெச்சத்தை உருத்திரன் இந்திரன் அக்கினி என்னும் வேதத் தெய்வங்களின் பெயருக்கு அடையாக்கினர். சிவன் என்னுஞ் சொற்போன்றே சிவந்தவன் என்று பொருள்படும் அரன் என்னுஞ் சொல்லை, ஹரன் என்று திரித்து அழிப்பவன் என்று பொருள் கூறினர்.

வேதத்தை அல்லது வேதங்களை முதற்கண் எழுதாது செவிமரபாகப் போற்றி வந்ததற்கு, எழுத்தின்மையே கரணியம். பின்னர்த் தமிழ் எழுத்துவழிப்பட்ட கிரந்த எழுத்துத் தோன்றிய பின்னும் பல நூற்றாண்டு எழுதா திருந்தமைக்குக் கரணியங்கள் பின்வரும் மூன்றாகும்: