பக்கம் எண் :

60தமிழர் வரலாறு-2

முதல்வனாகக் குறிக்கப் பெறும் மனு, தமிழ்ப்பெயர் கொண்ட ஒரு சோழனாயிருந்திருத்தல் வேண்டும். அவன் கண்ட நடுநிலை முறையையே, மகனை முறைசெய்த சோழன் சிறப்புப் பெயர் குறித்தல் வேண்டும்.

தில்லையிலிருந்து பாணினீயத்திற்கு விரிவுரை (பாஷ்யம்) வரைந்த பதஞ்சலியார் கி.மு. 2ஆம் நூற்றாண்டினரே. பேசு-.-பாஷ்-பாஷ்யம்.

ஆரியம் தமிழகத்தில் வேரூன்றி, நால்வரணமும் பிறப்பி லமைந்தவை யென்றும், பிராமணன் நிலத்தேவன் என்றும், துறவால் மட்டும் வீடுபேறென்றும், துறவு பிராமணனுக்கே வுரியதென்றும், பிராமணன் வேள்வி வளர்ப்பதனாலேயே உலகம் நடைபெறுகின்ற தென்றும், பிராமணனுக்குத் தொண்டு செய்வதனாலேயே ஏனை மூவரணத்தாரும் மறுமையில் நன்னிலையடைவரென்றும், பல தீய கொள்கைகள் தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டு வருவது கண்ட திருவள்ளுவர், தமிழரின் கண் திறக்கவும் அவரை முன்னேற்றவும் தம் திருக்குறளை இயற்றியருளினது கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். என் திருக்குறள் தமிழ்மரபுரையைப் பார்க்க.

பிராமணர்க்கு முற்றும் அடிமையாகித் தமிழகத்தைப் பாழாக்கிய பாண்டியருள் தலைசிறந்த பல்வேள்விச் சாலை (யாகசாலை) முதுகுடுமிப் பெருவழுதி, கி.மு. முதல் நூற்றாண்டினரா யிருந் திருக்கலாம்.

"இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே" 

(புறம். 6)

என்று, வேதமோதிய பிராமணரை யெல்லாம் முனிவர் என்று கூறி, அவருக்குமுன் தன் குடுமியவிழ்ந்து விழுமாறு தலை குனிந்து வணங்கும்படி, முதுகுடுமிப் பாண்டியனை வேண்டிய காரிகிழார் என்னும் தமிழத் தமிழ்ப் புலவன் நிலைமையை நோக்கும் போது, எத்துணை யுணவுத்தட் டிருப்பினும் இக்காலமே நற்காலம் என்று தெரிகின்றது. இனி,

"பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல" 

(மதுரைக். 759-63)

என்னும் அடிகள், தொல்காப்பியம் அரங்கேறிய காலத்து நிலந்தரு திருவிற் பாண்டியனும், நான்மறை முற்றிய அதங்கோட்டாசானைக் கொண்டு பல்வேள்வி செய்தவன்தானோ என்று ஐயுறச் செய்கின்றன.