பக்கம் எண் :

தமிழர் வரலாறு-261

கி.பி. முதல் நூற்றாண்டினனான கரிகால்வளவன்,

"இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலிற் றிருமா வளவன்
வாளுங் குடையு மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்
மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப்
புண்ணிய திசைமுகம் போகிய வந்நாள்
அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவ ருறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின
துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின விவைதாம்
ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும்
அரும்பெறன் மரபின் மண்டபம்" 

(சிலப்.5:89-110)

நிறுவி,

"காடுகொன்று நாடாக்கி
குளந்தொட்டு வளம்பெருக்கி
..............
கோயிலொடு குடிநிறீஇ" 

(பட்டினப்.283-4)

காவிரிக்குக் கரை கட்டி வேலி நிலம்ஆயிரங் கலம் நெல் விளையச் செய்து,

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய வீண்டி" 

(பட்டினப்.185-192)