இலக்கியப் புகழ் பெற்றவர். அவருள்ளும் பாரி பெரும்புகழ் பெற்றவன். அவ் வெழுவர் கொடைப் பொறையையும் அவருக்குப் பின் நல்லியக்கோடன் ஒருவனே தாங்கினானென்றும், நல்லூர் நத்தத்தனார் பாடுவர் (சிறுபாண்:113-15). தன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு போந்திருந்த குமணன், பெருந்தலைச் சாத்தனார்க்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்மையால், தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தன் தம்பியிடங் கொடுத்துப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்து, "சாதலினின்னாத தில்லை யினிததூஉம் ஈத லியையாக் கடை" | (குறள்.230) |
என்னுங் குறளுக்கு எடுத்துக்காட்டானான். இனி, எவ்வி, நன்னன், பண்ணன் முதலிய வேறுபல வள்ளல் களுமிருந்தனர். "ஓம்பா வீகை மாவே ளெவ்வி" | (புறம்.24) | "இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" | (அகம்.152) | "தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடி" | (அகம்.54) |
இவ் வள்ளல்கள் இன்றேல், கடைக்கழகக் காலத்திற் புலவர் பாணர் கூத்தர் பொருநர் முதலிய இரவலர் வாழ்ந்திருக்கவும், தமிழும் இசையும் கூத்தும் வளர்ந்திருக்கவும் முடியாதென்றே கூறலாம். மாபெருஞ் செல்வரான மூவேந்தரும், பிராமணர்க்குத் தொண்டுந் தானமுஞ் செய்வதிலும், அவர் ஏவிய வேள்விகளை யெல்லாம் இயற்றுவதிலுமே, காலத்தையும் குடிகள் பணத்தையும் செலவிட்டு, ஏழைப் புலவர்க் கெல்லாம் எட்டாக் கையராகவே யிருந்துவந்தனர். ஆரியத் தொல்கதைஞர், தமிழ வள்ளல்களின் தலைத்திறக் கொடைச் சிறப்பையும் பொன்றாப் புகழையும் மறைத்தற்பொருட்டு, வரையாது கொடுப்பவன் தலைவள்ளல் என்றும், கேட்கக் கொடுப்பவன் இடைவள்ளல் என்றும், புகழக் கொடுப்பவன் கடைவள்ளல் என்றும், வள்ளல்களை மூவகைப்படுத்தி, செம்பியன் முதலிய எழுவர் தலையெழு வள்ளல்களும், அக்குரன் முதலிய எழுவர் இடையெழு வள்ளல்களும், ஆய் முதலிய எழுவர் கடையெழு வள்ளல்களும் ஆவர் என்று பொருத்தமின்றி உண்மைக்கு மாறாக வகுத்துள்ளனர். இருந்த வூர்களை யெல்லாம் இரவலருக்குக் கொடுத்த ஆயும் பாரியும், புலவனுக்குத் தலையையுங் கொடுத்த குமணனையும் ஒத்த கொடையாளிகள் வரலாற்றிற்குத் தெரிந்தவரை ஒருவருமில்லை.
|