'ஸ்நேஹ' என்று
வழங்குகின்றது. இவ் வரலாற்றுமுறை அறியாதார், பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல்,
ஸ்நேஹ (சமற்) - நேயம் (பிராகிருதம்) - நேயம் (தமிழ்) எனத் தலைகீழாய்த் திரிப்பர்.
இங்ஙனமே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியிலும், உண்மைக்கு மாறாகக் காட்டப்பட்டுள்ளது.
பகுத்தறிவும் நடுவுநிலைமையுமுள்ள அறிஞர் உண்மை கண்டுகொள்வாராக. நேயம் வடசொல்லாயின்
'நெய்' என்பதும் அதன் அடிவேரான 'நள்' என்பதும் வடசொல்லாதல் வேண்டும். அங்ஙனமாகாமை
வெள்ளிடைமலை போல் தெள்ளிதே.
வடமொழி
ஆயிரக்கணக்கான தென்சொற்களைக் கடன் கொண் டிருப்பதால், மொழிநூன் முறைப்படி நடுவுநிலையாய்
ஆராய்ந்து உண்மை காணவேண்டுமேயன்றி, வடமொழி தேவமொழியாதலால் பிறமொழியி னின்று
கடன்கொள்ளாதென்னும் கருநாடகக் குருட்டுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தூய
தென்சொற்களையும் வடசொல்லென வலிப்பது, அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்திற் கேற்காதென,
வடமொழி வாணர் திடமாக அறிவாராக; ஆராய்ச்சியில்லாத தமிழ்ப் பேராசிரியரும்,
வடமொழியிலுள்ள சொல்லெல்லாம் வடசொல்லெனக் கருதும் பேதை மையை விட்டுய்வாராக. மயிர்
என்னும் தென்சொல் 'ச்மச்ரு'