வல்லார்க்கு ஏற்பித்தல் ஆகிய இருபயனோக்கி
என்றும், இவ்விரு பயனையும் முறையே சங்கராபரண மேளமும் கலியாணி மேளமும் அமைந்த
சுரப்பெட்டிகளிலும் ஒன்றரைக் கட்டை இரண்டரைக் கட்டை நாலு கட்டை நாலரைக் கட்டை
முதலியவாகப் பல்வேறு கட்டைக் கேள்வி (சுருதி) களுக்குப் பாடும் வழக்கத்திலும்
காணலாமென்றும், இம் முறை பற்றியே யாழ் நரம்புகளும் ஏற்றி அல்லது
மாற்றியமைக்கப்படும் என்றும் நம் நண்பர்க்கு அறிவுறுத்துகின்றேன். 'உழைகுரலாகிய
கோடிப் பாலை நிற்க இடமுறை திரியுமிடத்துக் குரல்குரலாயது செம்பாலை..... விளரி
குரலாய்ப் படுமலைப் பாலையாம்..... துத்தம் குரலாயது செவ்வழிப் பாலையாம். இளி
குரலாயது அரும்பாலையாம். கைக்கிளை குரலாயது மேற்செம்பாலையாம். தாரம் குரலாயது
விளரிப்பாலையாம்' என்று அடியார்க்குநல்லார் (சிலப். 8:35) கூறியிருத்தலை நோக்குக.
'இக் குரன்முத லேழினும் முற்றோன்றி யது தாரம்;
'தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங்
குரல்குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும்
விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு'
என்பதனால், தாரத்தில் முதற் பிறப்பதாகிய உழை
குரலாய்க் கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற் பிறக்கக் கட்டி யென்க'
(சிலப்.8:31-2) என்று அடியார்க்குநல்லார் கூறியிருத்தலை ஓர்ந்தறிந்து
கூர்ந்துணர்க.
குரல் சட்சமன்றி இளியே சட்சமாயிருப்பின், ஏழிசையைக் குரல் துத்தம்
கைக்கிளை உழை இளி விளரி தாரம் எனக் கூறாது இளி விளரி தாரம் குரல் துத்தம்
கைக்கிளை உழை என்றும், கேள்வி மாற்றிப் பண்ணுப் பெயர்க்கும்போது ''குரல் குரலாய்'',
''துத்தம் குரலாய்'' என்று கூறுவதற்குப் பதிலாக ''இளி யிளியாய்'', ''விளரி
யிளியாய்'' என்றும் கூறியிருப்பர். இங்ஙனம் யாண்டும் கூறாமையான் குரலே
சட்சம் என்பது தெளியப்படும். 'உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி'
என்றும், 'தாரத்துட் டோன்றும் உழை' என்றும் கூறியிருப்பது யாழ்களின் வெவ்வேறு
நரப்படைவைக் குறிக்குமே யன்றி ஏழிசை முறையைக் குறியா. இக்காலத்தும்
வீணை கின்னரி(பிடில்) முதலியவை ச ப ச ப என்னும் முறையிலும் சித்தார் தில்ரூபா
முதலியவை ம ச ப ச என்னும் முறையிலும் நரப்படைவு பெற்றுள்ளன. நரப்படைவும்
திவவென்னும் மெட்டுக் கட்டினின்று வேறுபட்டதென மற்றுமோர் வேறுபாடறிதல் வேண்டும்.
இவையெல்லாம் துலுக்க வாத்தியங்களெனப்படும் வடக்கத்து இசைக் கருவிகளை
ஆராய்ந்தாலொழிய விளங்கா. பண்டைத் தமிழ்ப் பழக்கங்கள் சில தமிழ்நாட்டில்
மதமயக்கினால் ஒழிக்கப்பட்டிருப்பினும் வடநாட்டில் இன்றும் தொடர்ந்து வழங்குகின்றன.
தொகையராப் பாட்டென்னும் உரையிடையிட்ட பாட்டும், டக்காவென்னும் இடக்கையும்,
தரப்புத் தந்திகள்
|