என்னும் ஆர்ப்பு நரம்புகளும் பண்டைத் தமிழ்நாட்டில்
இருந்தனவே. இவற்றையெல்லாம் இங்கு விரிப்பிற் பெருகும்.
குரலே சட்சம் என்பதற்கு
வேறு சில சான்றுகளும் உள. அவற்றைப் பின்னர்க் கூறுவேன். அடிகள் ஏழிசைபற்றி
மட்டுமன்றிப் பிற பகுதிகள் பற்றியும் தவறான கருத்துகளைக் கொண்டுள்ளமை, யான்
அடுத்துச் செல்வியில் வெளியிடும் ''ஆளத்தி'', ''யாழே வீணை'', ''ஏழிசைப் பெயர்கள்''
என்னும் கட்டுரைகளில் விளக்கப்படும். அறிஞர் நடுநிலைக் கண்கொண்டு
ஆராய்வாராக.
குறிப்பு:
(1) வித்துவான் வெள்ளைவாரணர் மத்தளத்தின் இருகட்
சுரங்களை யும் கூறியவிடத்தில் இசைப் பேராசிரியர் பொன்னையா பிள்ளை அவர்களின்
பெயரைப் புகுத்தியிருப்பது அவர்கட்குத் தெரியாதென்று நினைக்கிறேன்.
இசையறிவிற் சிறந்த அவர்கள் அங்ஙனங் கூறியிரார்கள் என்பது எனது கருத்து.
(2) வித்துவான் வெள்ளைவாரணர் யான் இத்துணை கூறிய
பின்பும் ''நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்'' என்று வலிப்பாராயின், தமிழிசை
யரசு தண்டபாணிப் பிள்ளையும் வேலூர்த் தேவார இசைவேந்தர் அப்பா துரை ஆச்சாரியாரின்
மகனார் சம்பந்தமூர்த்தி யாச்சாரியாரும் போன்ற அறிஞர்முன் மிடற்றினாலும்
கருவியினாலும் தம் கொள்கையை மெய்ப் பித்து அவர்தம் உடம்பாட்டைப் பெற்றுவிடின்,
யான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
(3) பண்டைத் தமிழர் நம் போன்ற புல்லறிவுப்
போலித் தமிழரல்லர். அவரது மதிநுட்பமும் நுழைநோக்கும் பலதுறைப்பட்ட
கலைத்திட்பமும் நாகரிகப் பண்பும் ''பழந்தமிழ் நாகரிகம்'' என்னும் எனது நூலிற்
பரக்கக் காட்டுவேன்.
- 'செந்தமிழ்ச் செல்வி' துலை 1943
|