பக்கம் எண் :

குரல் சட்சமே; மத்திமமன்று 13

-13-
 

3. நன்னூல் நன்னூலா? 

 

    பவணந்தியார் தம் நூலுக்கு நன்னூல் எனப் பெயரிட்டிருப்பினும் சுவாமிநாத தேசிகர் அந் நூலைப்பற்றி,  'முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கெந்நூலாரு மிணையோ வென்னுந் துணிவே மன்னுக' வெனக் கூறியிருப்பினும், தொல்காப்பியம் முதலிய நிறை யிலக்கண நூலொடு ஒப்பு நோக்கியும் மொழிநூற்குப் பொருந்தவும் காணுங்கால், அது பெரும்பாலும் நன்னூலன்று என்பதே பெறப்படும்.

    தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முப்பாற்றாதலின் எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் இலக்கண நூல்கள் எத்துணை விரிவுபட்டனவாயினும், நிறைவுடையனவாகா. ஒருகாலத் தொரு பாண்டியன், 'என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்' எனக் கவன்றதாக இறையனா ரகப்பொருளுரை கூறுதல் காண்க.

    பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட மையானும், இருவகை யணிகளும் செய்யுளில் அடக்கப்பட்டமையானும் தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என மூன்றாகப் பகுப்பதே பண்டை மரபாம்.

    நன்னூல், நூற்பாவும் இயலும் அதிகாரமும் ஆகிய மூன்றுறுப்பு மடக்கிய பிண்டமேனும் தலையான பொருளதிகாரம் இல்லாமையின் முண்டமே யென்க.  அதோடு பல இலக்கணங்களில் வழுவியுமுள்ளமை அதன் குறைபாட்டை மிகுத்துக் காட்டுவதாகும்.

நன்னூல் வழீஇயுள்ள இடங்களிற் சில வருமாறு:

1. எழுத்தியல்

    (1) சார்பெழுத்து வகை

    தொல்காப்பியர்,

    "சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே" (1)

    எனச் சார்பெழுத்தின் தொகையும்,