|
3. ''உருவச்சிலைச் சான்றை
நோக்குவோமாயின், மேல்நாட்டிலும் கீழ்நாட்டிலும் பண்டைக் காலத்திலும் இடைக்
காலத்திலுமிருந்த யாழ் வில்யா ழொத்திருந்ததேயன்றி வீணை யொத்திருந்ததன்று என்பது
அறியப்படும். இவ் வியல்பிற்குத் தென்னாடு விலக்கன்று.''
பண்டைத் தமிழர் இற்றைத் தமிழர்
போன்றவரல்லர். முன்னவர் நாகரிகத்திலும் அறிவிலும் நாயகம்பெற்றவர்; பின்னவர்
அடிமைத் தனத்திலும் பேதைமையிலும் பெயர் பெற்றவர்.
'செய்கலைக் கரசி செய்யுள்'(Poetry is the Queen of
Arts) என்பர் சீரியோர். பண்டைத் தமிழா செய்யுட் கலையில்
ஒப்புயர்வற்றவர் என்பது உலகறிந்த வுண்மை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா என்னும் பாகுபாடு தமிழுக்கே சிறந்தது. .அவற்றுள்ளும், வெண்பாவும்
கலிப்பாவும் போன்ற யாப்பு வகைகளை வேறெந்நாட்டாரும் கனவிலும் கருதியிருக்க முடியாது.
யாப்பிலக்கணத்தை யுள்ளிட்ட பொருளிலக்கணமோ மொழி யிலக்கணத்தின் கொடுமுடியாய்த்
தமிழரைத் தனிவகுப்பினராகக் காட்டுவது. இத்தகைய இலக்கணத்தாற் பொலிவு பெற்ற
இயற்றமிழோ டமையாது, இசைநாடகக் கலைகளையும் அதனொடு கூட்டி முத்தமிழ் என வழங்கிய
தொன்றே, பண்டைத் தமிழரின் இசைப்புலமை யேற்றத்தையும் நாடகப்புலமை நாயகத்தையும்
மொழித்திற முதன்மையையும் மதிநுட்ப மாண்பையும் ஐயந்திரிபற விளக்கப் போதிய
சான்றாம். இத்தகை மொழி வளர்ச்சிக்கேற்ப, வாழ்க்கைமுறை ஒழுக்கம் தொழில்திறம்
பொறி வினை முதலிய பிற நாகரிகத் துறைகளிலும் பண்டைத் தமிழர் ஏற்றம்
பெற்றிருந்தனர். சிறப்பாக, செய்யுட்கலையில் சீரிய புலமை வாய்ந்திருந்த அவர்,
அதனொடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கலையிலும் ஏற்றம் பெற்றிருந்தனர் என்பதைச்
சொல்லவும் வேண்டுமோ?
பழந்தமிழ் இலக்கியம் பலவகையில் இறந்துபட்டமையையும்,
தற்காலத் தமிழன் குலப்பிரிவினையால் தாழ்வுண்டிருப்பதையும், இந்திய வரலாறு தலைகீழாய்
எழுதப்பட்டிருப்பதையும், பயன்படுத்திக்கொண்டு பண்டைத் தமிழன் கண்ட யாழ் வில்யாழே
என்பது நடுநிலை திறம்பிய நலமில் கூற்றாம்.
4. ''திருஞானசம்பந்தர் பாடிய யாழ்முரிப்
பண்ணைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் யாழிலிட்டுக் காட்ட
முடியவில்லை. அவ்யாழ் வீணையா யிருந்திருந்தால் அங்ஙனம் தவறியிருக்க முடியாது.
ஏனெனின், மிடற்றி சையின் எத்திற நுணுக்கத்தையும் வீணையிற் காட்ட இயலும், ஆதலால்,
9ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்திலிருந்தது வில்யாழ் வகையே. அதன் பின்
(வடநாட்டினின்று) வீணை வந்தது. அது வந்ததும் யாழ் நெகிழவிடப்
பட்டது.'' |