பார்ப்பார் என மட்டும் உலகவழக்கிலும், அழைக்கப்பட்டனர்.
பிராமணரை மட்டும் அந்தணர் எனக் கூறும் தமிழ்நூல்களெல்லாம் பிற்காலத்தனவன்றி
முற்காலத்தனவல்ல. அந்தணர் பார்ப்பார் என்னும் இருபெயரும் தூய தென்சொல்லாயிருத்தலே,
அப் பெயராற் குறிக்கப்பட்ட தமிழ் வகுப்பார் அல்லது குலத்தார் தொன்றுதொட்டுத்
தென்னாட்டிலிருந்து வந்தமையைப் புலப்படுத்தும். மேனாட்டினின்று வந்த ஐரோப்பியர்
(ஆட்சித் தொழில் பற்றித்) துரைமார் என்னும் தமிழ் அல்லது தெலுங்கச் சொல்லாற்
குறிக்கப் பட்டது போன்றே, வடநாட்டினின்று வந்த பிராமணரும் அந்தணர் அல்லது
பார்ப்பார் என்னும் தமிழ்ச்சொல்லாற் குறிக்கப்பட்டனர் என்க. ஆயினும், பிராமணர்
தம்மைத் தமிழரினும் உயர்ந்தவராகக் காட்டிக் கொள்வதால், தம்மைப் பிராமணர்
என்னும் வட சொல்லாலன்றிப் பார்ப்பார் என்னும் தென்சொல்லாற் குறிக்க
விரும்புகின்றிலர். ஆயின், தமிழ்நாட்டில் எல்லாவகையிலும் தலைமை பெற்ற முனிவரைக்
குறிக்கும் ஐயர் அந்தணர் என்னும் தென்சொற்களால் தம்மைக் குறிப்பதில்
பெருமையும் பெரு மகிழ்வுங் கொள்கின்றனர். அதோடு, அவ் விரு தென்சொற்களையும்
வடசொல்லாகக் காட்டவும் முயல்கின்றனர். இம் முயற்சியின் நோக்கம், பிராமணரே
தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் ஐயரென்றும் அந்தண ரென்றும் அழைக்கப்பெற்று வந்தவர்
எனக் காட்டுவதேயாகும். இதனால். தமிழ் நாகரிகம் ஆரிய நாகரிகமாகக்
கொள்ளப்பட்டுவிடும் என்பது கருத்து.
பிராமணர் வந்தபோதிருந்த தமிழப்
பார்ப்பார் பிராமணரொடு கலந்துவிட்டமையால், இன்று பார்ப்பார் என்று
(வடமொழியறியாது தமிழி லேயே வழிபாடியற்றும்) ஒரு தமிழக் குலத்தார் இல்லை.
இங்ஙனங் கலந்து போனமையால், பிராமணருக்குத் தொகைப் பெருக்கமும் தமிழ்ப்
பார்ப்பார்க்குக் குலவுயர்வும் பயன். குருக்கள் என்னும் ஒருசார் தமிழப் பூசனைக்
குலத்தாருள் ஒரு பகுதியினர், அண்மையிலேயே வட மொழியைக் கற்றுக் கொண்டு அதில்
வழிபாடியற்றுவதன் பயனாகப் பிராமணராகியுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. தூய தமிழ்க்
குலத்தாரான செட்டிமார் தம்மை வைசியரென்றும், நாடார்கள் தம்மைச் சத்திரியரென்றும்,
வேளாளர் தம்மைச் சூத்திரர் அல்லது சற்சூத்திரர் என்றும், சொல்லிக்கொள்வது
மேற்கூறியதை நன்கு விளக்கும்.
இதுகாறுங் கூறியவற்றால், அந்தணர்
என்னும் சொல் முனிவரையே சிறப்பாகக் குறிக்குமென்றும், பொருளிலக்கணப்
பாகுபாடுபற்றிச் சிறுபான்மை கல்வித் தொழிலைப் பொதுவாக வுடைய பல்குலத்தாரையும்
சுட்டுமென்றும், ஒரு நிலையாரையன்றி ஒரு குலத்தாரையுந் தனிப்படச் சுட்டாதென்றும்,
பிராமணரை அந்தணரென்றது பிற்கால வழக்கென்றும்,
அறிந்துகொள்க. |