பக்கம் எண் :

24மறுப்புரை மாண்பு

-24-

 

4. நன்னூல் நன்னூலா-மறுப்பறுப்பு

 

    சென்ற வாரத் தென்றல் இதழில் நன்னூல் நன்னூலே என்றொரு கட்டுரை, என் நன்னூல் நன்னூலா? என்னும் கட்டுரைக்கு மறுப்பாக வெளிவந்ததைக் கண்டேன். அம் மறுப்பின் போலித் தன்மை தமிழாராய்ச்சி யாளர்க்குத் தெளிவாகத் தெரிவது தேற்றமாயினும், மாணவருலகின் மயக்கறுத்தற்பொருட்டு, இம் மறுப்பறுப்பை விடுகின்றேன்.

    ''நன்னூல் நன்னூலே'' என்னும் கட்டுரையாசிரியர் சென்னைச் சௌக்கார்பேட்டை ஜெயின் உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழா சிரியர் வித்வான் எஸ்.பி. கெம்பீர நைனார் என்னும் செய்தியொன்றே அவர் பவணந்தி என்னும் சமண முனிவர் இயற்றிய நன்னூற் குறையை மறைத்தற் காரணத்தை அறிஞர்க்குணர்த்தப் போதுமானதாம். மதப்பற்று மதப் பற்றன்றோ.

    இனி, மறுப்பாசிரியர் மறுப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்தறுப்பாம்.

மறுப்பு :  நன்னூல் நன்னூலா? என்று கேட்டிருப்பது, மரத்தைக் கண்ட ஒருவன், இந்த மரம் மரமா? என்று கேட்பது போல் வினாவில் தவறுபட்டு வினா வழுவாய் அமைந்துள்ளது.

அறுப்பு : மரத்தை மரமென்று கண்ட ஒருவனுக்கு, இது நன்மரமா என்று ஐயம் எழுமேயன்றி மரமா என்று ஐயம் எழாது. அதுபோல் ஒரு நூலைக் கண்டவனுக்கு இது நன்னூலா என்று ஐயம் எழுமேயன்றி நூலா என்று ஐயம் எழாது. பவணந்தி முனிவர் தம் நூலுக்கு நன்னூல் என்று பெயரிட்ட அளவிலேயே அது நன்னூலாகிவிடாது. பொருளுக்கும் பெயருக்கும் பொருத்தம் இருப்பினும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இரு கண்ணுமில்லானுக்குத் தாமரைக்கண்ணன் என்றும், இரு காலு மற்றவனுக்குத் தாண்டவராயன் என்றும், பெயரிடப்பட்டிருக்கலாம். குற்றம் நிறைந்த வேறுசில நூல்கள்கூட நன்னூல் என்று பெயர்பெறலாம்.

    ஒரு கனியை உண்டமட்டில் அது நன்றென்று ஒரு பொதுமகன் கொள்ளுதல் தகாது. அதனை ஆய்ந்து அதன் உண்மைத் தன்மையைக் காண்பவன் மருத்துவனே. அதுபோல், ஒரு நூலையும் ஒரு மாணவன் கற்ற அளவில் அது நன்றென்று கொள்ளுதல் முடியாது. ஆராய்ச்சியாளனே அதன் உண்மைத் தன்மையைக் காண இயலும்.