பக்கம் எண் :

நன்னூல் நன்னூலா-மறுப்பறுப்பு 25

-25-

 

4. நன்னூல் நன்னூலா-மறுப்பறுப்பு

 

    நன்னூல் என்ற பெயரளவில் அதை நன்னூலென்று தாம் மயங்கியது மன்றி, தம்மைப்போற் பிறரையுங் கருதி அம் மயக்கத்தைப் பிறர் மீதும் ஏற்றிக்கொள்கின்றார், நம் மறுப்பாசிரியர்.'நன்னூல் நன்னூலா'? என்னும் வினாவை, நல்லெண்ணெய் நல்லெண்ணெயா? நன்மாறன் நன்மாறனா? நல்ல பாம்பு நல்ல பாம்பா? என்றித் தகையவற்றுள் ஒன்றற்கு ஒப்பிடலா மேயன்றி, இந்த மரம் மரமா? என்னும் வினாவுக்கு ஒப்பிடலாகாது. இதை உவமையிலக்கணம் செவ்வையாய் அறிந்தாரே உணர்வர்.

    மேலும், வினாவில் தவறுபட்டு வினா வழுவாயமைந்துள்ளது. என்னும் சொற்றொடர், கூறியது கூறலாம். வினாவில் தவறுபட்டுள்ளது வினா வழுவாயமைந்துள்ளது என்னும் இவ் விரண்டில் ஒன்றே அமையும்.

மறுப்பு 2 : 'இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன இடத்தில் குறுகி ஒலிக்கும் என  மாத்திரை குறிக்கும் இடத்தும், புணரியலிலும் கூறினாற் போதுமானதாம்.' எனக் கூறி, முன்பு தாம் மறுத்த அச் சார்பு எழுத்துகளின் வகைகளை ஏற்றுக்கொள்ள உடன்படுகிறது.'

அறுப்பு : சில எழுத்துகள் சிலவிடத்திற் குறுகி யொலித்தமட்டில் சார்பெழுத்துக ளாகிவிடா. எழுத்துகள் குறுகி யொலித்தல் மட்டுமன்றி நீண்டும் ஒலிக்கும்.

    'ஆவியு மொற்றும் அளவிறந் திசைத்தலும்
    மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்'  (101)

    என்று நன்னூலாரே நன்றாய் (தெளிவாய்)க் கூறியுள்ளார்.  ஆகவே, குறுகியும் நீண்டும் ஒலிக்குமிடமெல்லாம் சார்பெழுத் தியல்பைப் பிறழ வுணர்தலாம். குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும், குறுகி யொலித்தலால் மட்டுமன்றித் தத்தம் முதலினின்று திரிந்தொலித்தாலும் சார்பெழுத்துகளாயின என்றறிதல் வேண்டும்.

மறுப்பு3 : ''சன்மதி'',  ''யசோமதி'' யென்ற பெயர்களும், ''பவணந்தி,'' "தரும நந்தி'' என்ற பெயர்களும் பண்டுதொட்டு இன்றுகாறும், தமிழ்நாட்டு ஜைனர்களுக்கே யிட்டு வழங்கப்படும் பெயர்களாக அமைந்துள்ளன..... இப்படியிருக்க யாதொரு ஆதாரமுமின்றி நன்னூலாரை ஆரிய அந்தணர் என்றால், அதை ஆராய்ச்சியுலகம் அடியோடு ஏற்காது.

அறுப்பு : சன்மதி, யசோமதி, பவணந்தி, தருமநந்தி என்பன தமிழ்ப் பெயர்களல்லவென்பதும், சமணம் வடநாட்டினின்று வந்த அயன்மதம் என்பதும், யாவரும் அறிவர். பவணந்தியார் ஒருகால் பிறப்பளவில் திரவிடராயிருந்திருப்பினும், கருத்தளவில் மாறுபட்டவர் என்பதை எவரும் மறுக்கவொண்ணாது. ஒருவரை ஓர் இனத்தோடு சார்புபடுத்துவது, சிறப்பாக அவர் மனப்பான்மைபற்றியே யன்றிப் பிறப்புப் பற்றியன்று.

மறுப்பு 4 : நம் தமிழ்நாடு தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பும் நன்னூலார் காலத்திற்கு முன்பும் ஆகிய இடைப்பட்ட காலத்தில்