கடக லக்கினம், சிங்க லக்கினம் என்று
வடசொல்லாற் குறிப்பவற்றை, கடகவோரை, மடங்கலோரை (அல்லது அரிமாவோரை) என்றே
செந்தமிழிற் குறித்தல் வேண்டும்.
கிரேக்க மொழியில் நூற்றுக்கணக்கான
அடிப்படைச் சொற்கள் தென்சொற்களாக உள்ளன. அவற்றுள் இரண்டொன்றைக் கண்ட வளவானே
அவற்றைக் கிரேக்கச் சொல்லென்றே வலிப்பது, வரலாற்றறிவும், மொழிநூலாராய்ச்சியும்
இல்லாதார் கூற்றே. இதை விரிப்பிற் பெருகும்; விளக்கின் மற்றொன்று விரித்தலாம்.
ஆதலால், இம்மட்டில் இதனை இங்கு நிறுத்துகின்றேன்.
19. ''யூதர்கள் பழந்தமிழ் நாட்டில் இப்போது
கேரளம் என்ற பகுதியில் பிறருடைய கையினின்றும் தப்பிச் சரண்புகுந்தார்கள். 'யூதர்'
என்ற பெயர் 'யௌதி' என்று வழங்கப்படும் ஹீப்ருச் சொல்லாகும்.''
யூதர் என்பார் கானான் நாட்டுக்குரிய அயல்
இனத்தார். பகைவராற் சிறைப்பிடிக்கப்பட்டும் பகைவர்க்குத் தப்பியும் உலகத்தின் பல
பகுதி களிலும் பரவி வாழ்ந்துவந்தவர். அவர்க்குப் பிற இனத்தார்க்குப் போன்றே
அவர்தம் மொழிச் சொல்லாற் பெயர் அமைந்துள்ளது. இதில் என்ன வியப்பு! ஆங்கிலரை
ஆங்கிலர் என்னாது வேறெப் பெயரால் அழைப்பது? இதனால் பிறமொழிச் சொல் தமிழிற்
புகுந்துள்ளதெனல் எத்துணைப் பேதைமையும் பகுத்தறிவின்மையும் ஆகும்! மராட்டியர்,
குச்சரர், சிங்களர், சீனர், சோனகர், யவனர் முதலிய எத்துணையோ வேற்று நாட்டார்
வேற்றுமையின்றித் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக் கின்றனரே. இது
தமிழ்நாட்டின் வணிக வளர்ச்சி, செல்வப் பெருக்கம், அரசியற் சிறப்பு, மக்கள்
பண்பாடு முதலிய சிறப்பியல்புகளையன்றோ உணர்த்தும். இவ் வுண்மைக்கு மாறாக, இதனால்
உயர்தனிச் செம்மொழி யாகிய தமிழைக் கலவை மொழியாகக் காட்ட முயல்வது, ஒரு
பேராசிரி யர்க்கு, அதுவும் தமிழ்ப் பேராசிரியர்க்கு, அதுவும் அண்ணாமலைப்
பல்கலைகழகத் தமிழ்ப் பேராசிரியர்க்கு, எத்துணை இளிவரல் என்பதை எண்ணிக்
காண்க.
20. ''அரபியர்களும் இங்கே வந்து
தங்கினார்கள். முகமது நபிகள் தோன்றுவதற்கு முன்னிருந்தே தமிழரோடு சேர்ந்து அரபியரும்
கப்பலோட்டியவர்கள்.''
மகமது முன்னறிவர் கி.பி.6ஆம் நூற்றாண்டினர்.
அரபியரின் முதற் பெற்றோனான ஆபிரகாம் கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்டவன். அவன்
காலத்துக்கும் முன்பு தமிழர் தென்கடலிலும் கீழைக் கடலிலும் மேலைக் கடலிலும்
கப்பலோட்டினர்.
21. ''சென்னைப் பல்கலைக்கழகம்
தயாரித்துள்ள தமிழ் அகரமுதலி யில் 891 அரபிச் சொற்கள் வந்துள்ளன. இசுலாம்
மதத்தைச் சேர்ந்த சொற்களும் அரசியற் சொற்களும் இவற்றில் நிறைய
வருகின்றன.
|