குடியாட்சியின் தோற்றமும், வளர்ச்சியும் 1, ஆட்சிமுறையின் தோற்றம் உலகில் நாடுகள் பல, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி முறை ஒவ்வொரு வகையாயிருக்கிறது. அஃதோடு ஒரே, நாட்டில்கூட ஆட்சிமுறை என்றும் ஒரே வகையாயிருப்பதில்லை. நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் அது கூடியும் குறைந்தும் திரிந்தும் மாறுபட்டு வருகிறது ஒரே நாட்டில் காலத்துக்கேற்றபடி ஆட்சிமுறை மாறுபடுவதுபோல, ஒரேகாலத்திலுள்ள பல நாடுகளிலும்கூட ஆட்சிமுறை மாறுபட்டேயிருக்கிறது. ஆயினும் இம்மாறுபாடுகள் தொடர்பற்ற மாறுபாடுகள் அல்ல. ஒரு நாட்டில் இன்று ஏற்படும் அரசியல் நேற்று ஏற்பட்டிருந்த அரசியலின் தொடர்ச்சியேயாகும். மேலும் ஒரு நாட்டின் அரசியல் நிலையும் மாறுபடும் அதனையடுத்துள்ள நாடுகளையும் தாக்காமலிரா. எனவே அரசியல் வளர்ச்சியை ஆராய்பவர் இரண்டுவகையான வளர்ச்சிப் போக்கைக் கவனித்தல் வேண்டும். ஒன்று ஒரே இடத்தில் காலப்போக்கால் ஒன்றின்பின்ஒன்றாக ஏற்படும் வளர்ச்சிமுறை. இது கீழிருந்து மேற்செல்லும் ஒரு செங்கோட்டை ஒத்தது. இன்னொன்று இடம்பற்றி ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குச் சென்று வளர்ச்சிதரும் வளர்ச்சிமுறையாம். இது பக்கவாட்டில் செல்லும் ஒரு படுத்தற்கோட்டைப்போன்றது. உலகில் அரசியல் |