கருத்துக்கள் வளர்ந்த வகையை இவ்விரண்டு முறையிலும் கவனிப்போம். உலகில் அரசியல் தோன்றிய வகையைப் பற்றியும், முதன்முதலில் எத்தகைய அரசியல் தோன்றிற்று என்பதைப்பற்றியும் மக்களிடையே பலவகையான கருத்துக்கள் பரவியிருக்கின்றன, குடியாட்சியைவிட முடியாட்சி அஃதாவது அரசன் இருந்து ஆளும் ஆட்சிமுறையே முற்பட்டதென்று தொன்றுதொட்டுக் கருதப்பட்டுவருகிறது. அரசன் கடவுளருளாலேயே தோன்றினான் என்று அக்காலத்தவர் கொண்டனர். இந்தியாவில் அரசன் திருமாலின் கூறு ஆவான் என்று கொள்ளப்பட்டான். சப்பானியர் அரசன் கடவுளின் ஓர் ஆட்பேர் என்றே கொள்கின்றனர். மேனாடுகளில் நெடுங்காலம் சமயப்பற்றுடைய மக்கள், உலகில் சமயத்தை நிலைநிறுத்த ஒரு சமயத்தமைலவனையும் அரசியலை நிலைநிறுத்த ஒர் அரசனையும் கடவுள் அமைத்தார் என்று எண்ணினார்கள். இக்கொள்கை தெய்விக அரசுக்கொள்கை எனப்படும். இக்கொள்கை கவிஞர் கற்பனைக்கும் அரசனைச் சார்ந்தொழுகியவர்களுக்கும் மிகவும் உகந்ததாகவே தோன்றிற்று. ஆயினும் அரசன் மனம்போன போக்கில் நடக்கத் தொடங்கியபோது இக்கொள்கைக்கு எதிர்ப்புத் தோன்றிற்று. பகுத்தறிவுக்கண்கொண்டு ஊன்றி நோக்கிய மக்களுக்கு இதன் குறைபாடுகள் நன்கு விளங்கின. கடவுளே ஒர் அரசனை ஏற்படுத்தியிருந்தால் எல்லா நாடுகளும் ஒரே அரசனை ஏற்றிருக்கும், பல அரசர்கள் இருக்கமாட்டார்கள். கடவுள் ஏற்படுத்திய அரசர் படைவலியால் தம் அரசாட்சியைக் காக்கவோ அடுத்த அரசரைத் தாக்கவோ, தாக்கிய அரசரை எதிர்த்து வெற்றி |