பக்கம் எண் :

104குடியாட்சி

உண்மையான பெயராண்மையுடைய அவையாக விளங்கலாயிற்று. இதற்கு நேர்மாறாகப் பெருமக்கள் அவை, எவ்வகை வளர்ச்சியும் அடையாதிருந்தது, அடிக்கடி அரசர்கள் புதிய பெருமக்களைத் தம் சார்பில் அமைப்பதன் மூலம், அது தனி ஆற்றலும் நாட்டுப் பொறுப்பும் இழந்து வந்தது. மேலும் பொருள் வழங்குவதும், மந்திரிகள் அமைப்பதும் அவர்களை இயக்குவதும் பொது அவையாயே அமைந்தது. எனவே சட்டப்படி பெரு மக்களின் அவையுடன்கலந்து அதன் இணக்கம் பெற்றே பொது அவை சட்டமியற்ற வேண்டுமாயினும், அரசியல் நடைமுறையில் பெருமக்கள் அவை, பொதுஅவைப் போக்கிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டது.

   1832-ம் ஆண்டு வரையில் இரண்டு அவைகளிலும் ஆற்றல் செலுத்திய வகுப்புகள் கிட்டத்தட்ட ஒரே நிலையுடையவையா யிருந்தபடியால் இவ்வகையில் பிணக்கு இல்லாதிருந்தது. 1832-முதல் 1885-வரை புதிய இடைத்தர வகுப்பினர் கைப்பட்டு முன்னேறிய பொதுஅவையுடன் பெருமக்கள் அவை அவ்வப்போது முரண்பட்டது. ஆயினும் அது முறுகாதிருந்தது. 1893-ல் முதன் முதலாகப் பொதுஅவை நிறைவேற்றிய அயர்லாந்துக் குடியாட்சிப் பகர்ப்பைப் பெருமக்கள் அவை மறுத்தது. அரசாங்கத்தில் தலைமை தாங்கியவர்கள் உறுதியால் இப்பிணக்கு முற்றவில்லை. ஆனால் 1909-ல் அரசாங்கத்தார் கொண்டுவந்த புதிய வரவு செலவுத் திட்டத்தின்படி வருமானவரி வருமான மிகுதிக்கேற்பப் படிப்படியாக உயர்த்தப்பட்டது. பொது அவையில் பெருத்த எதிர்ப்பு இருந்தபோதிலும் அது நிறைவேறிற்று. ஆனால் பெருமக்கள் அவை அதை மறுக்கவே