பக்கம் எண் :

குடியாட்சி107

   தொடக்கத்தில் அரசருடன் ஒப்பாயிருந்த பெரு மக்கள் வலிமை பெற்றிருந்தனர். பெருமக்கள் அவையும் அரசருடன் வீற்றிருந்து தீர்ப்பளிக்கும் முதற்பெருமன்றமாயிருந்தது. இன்றும் முடிவான மேல் வழக்குகள் அதன் பெயராலோ அதன் கிளைக்குழுமன்றங்களாலோதான் நடைபெற்று வருகின்றன. பொது அவை அரசு வீற்றிருந்து ஆணை செய்யும் அரசன் முன்னும் பெருமக்கள் முன்னும் நின்று கொண்டு மன்றாடும் அவையாகவே தொடங்கிற்று. இன்னும் அரசர் முடியேற்பு முதலிய தறுவாய்களில் வெளிச் சடங்கு முறையில் இப்பழக்கம் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால் மன்னர் செலவுக்குப் பணந்தரும் உரிமை காரணமாகப் படிப்படியாய்ப் பொது அவை வலிவு பெற்று மேம்பட்டது, மன்னர் செயலாற்றுங் குழுவாக ஏற்பட்ட அமைச்சரவையைப் பொது அவை தேர்ந்தெடுத்து அவர்களை இயக்கியதன் காரணமாய் படிப்படியாகப் பொது அவையை உண்மையில் ஆட்சி புரியும் அரசாங்கத்தின் தலைமை அவையாகவும். சட்ட அவையாகவும் முழுமுதல் முறைமன்றமாகவும் சுருங்கச் சொல்லினால் உண்மை அரசியல் மன்றமாகவும் விளங்குகிறது.

   மூன்றாம் பிரிவில் குறிப்பிட்டது போலவே இன்றைய பிரிட்டிஸ் அரசாங்க முறை இப் பொது அவை மூலம் முழுப் பொறுப்பு வாய்ந்த குடியாட்சி நடத்தும் குடியரசேயாயினும், பெயரளவில் அரசுரிமை யறிகுறியாகிய முடியரசையும், பெருமக்கள் ஆட்சியின் குறிகிடாகிய பெருமக்கள் அவையையும், குழுவாட்சியாகிய அமைச்சர் குழுவையும், வல்லுநர் ஆட்சியான நிலையான பணியாளரையும் கொண்டு திகழ்கிறது.