19-ம் நூற்றாண்டின் பிற் பகுதி முதல் அரசியல் மன்றின் வாழ்வில் ஒரு புதிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னெல்லாம் வரன்முறையான இரண்டு கட்சிகள் தான் மாறி மாறித் தலைமை நிலைக்குப் போராடின. கன்ஸர்வேட்டிவ்கள் பெரும்பாலும் உயர் குடி மக்கள் சார்பிலும், பெரும் பேரரசு நிலைச் சார்பிலும், மாற்றம் வேண்டாப் பழைமை பேணும் சார்பிலும் நின்றனர். மாற்றம் வேண்டுமென்றதனோடு சுற்றுப் பரந்த மனப் பான்மையும் பேரரசு நிலையில் தளர்வும் கோரியவர்கள் லிபரல்கள். விக்டோரியா ஆட்சியின் இறுதியிலிருந்து 18-ம் நூற்றாண்டுக் கைத்தொழில் புரட்சியின் பயனாய் முதலாளிகள், தொழிலாளிகள் என்ற வகுப்புகள் தோன்றின. முதலாளிகள் தம் நிலைக்கேற்பக் கன்ஸர்வேட்டிவ் கட்சியை ஆதரித்தும் தொழிலாளர் சிலகாலம் லிபரல்களுடன் சேர்ந்து உழைத்தும் வந்தனர். சிற்சில சமயம் இந்நிலை மாறியதும் உண்டு. ஆனால் 1920க்குப் பின் இது வளர்ச்சியுற்று இவ் வகுப்பு தனிக் கட்சியாக வளம்பெற்றது. நாளடைவில் மற்ற இரு கட்சிகளுள் ஒன்றின் துணைகொண்டு அரசியலில் தலைமை நிலையை யடையவும் செய்தது. உலக இரண்டாம் போரிறுதியில் அவர்கள் தனிப்பட நின்றே அரசாங்கமும் அமைக்க முடிந்தது. ஆட்சிமுறையில் பிரிட்டன் முழுக் குடியாட்சி நிலையை எய்திய போதிலும், தொழிற் கட்சியினர் கண் கொண்டு அதிலும் சிறப்பாக அதில் முனைத்த முன்னணியினர் கண் கொண்டு பார்த்தால் வாழ்வியல் அமைப்புக்காரணமாக செல்வ நிலை உயர்வு தாழ்வுகள் பேணப்பட்டு, உண்மைச் சரிஒப்பு நிலைஇல்லாதிருக்கின்றது என்பது பெறப்படும். ஜெர்மனியில் தோன்றிய உலகப் |