தனிப் பண்புகளுக்குக் கேடின்றி ஒற்றுமை குலையாத ஒரு தனிப்பட்ட அரசியல் முறையை அவர் அதில் வகுத்து அமெரிக்காவின் முதல் தலைவராக உலகில் பெரும் புகழ் பெற்றார். அமெரிக்க நாட்டில் ஆங்கிலேயர்கள் குடியேறிய காலம் எலிஜபெத், முதல் ஜேம்ஸ் ஆகியவர்கள் ஆட்சிக் காலம் ஆகும். நாம் ஏற்கெனவே முன் பிரிவுகளில் குறிப்பிட்டபடி ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சி அதற்கு நெடுநாள் முன்னரே தொடங்கி முன்னேற்ற மடைந்து வந்தது. புத்தம் புதிதாக அரசியல் முறை வகுக்கத் துணிந்த அமெரிக்கப் புதுக் குடிமக்களுக்கு இது ஒரு முன்மாதிரியா யிருந்ததென்பது எதிர்பார்க்கத் தக்க இயல்பே யாகும். உண்மையில் அரசியலமைப்பிற்கான ஒழுங்குத் திட்டங்கள் வகுக்க முற்பட்ட அமெரிக்க நாட்டுத் துணைத்தலைவரான தாமஸ் ஜெப்பெர்ஸன் (Thomas Jefferson) என்பவர் ஆங்கில அரசியல் மன்ற நடவடிக்கைப்பதிவேடுகளையே அவ்வகையில் பெரிதும் பின்பற்றினார். ஆங்கில நாட்டைப் போன்றே அமெரிக்காவிலும் இரண்டு அவைகள் ஏற்பட்டதும் ஆங்கில நாட்டைப் போன்றே தேர்தல் முறைகள், சட்டங்கள் அமைக்கும் குழு, உட்குழு நடைமுறைகள் ஆகியவைகள் ஏற்பட்டதும் இதனாலேயேயாகும். ஆயினும் இவ்வொற்றுமை பெரும்பாலும் மேற் போக்கான ஒற்றுமைகளேயாகும். அரசியலமைப்பை உன்னிப்பாகக் கவனிப்பார்களுக்கு ஒற்றுமைகளைவிட உள்ளார்ந்த வேற்றுமைகளே மிகுதி என்பது தெரிய வரும். |