யல்களும் தனிப்பண்புகளும் கெடாதமுறையில் அவற்றை உட்படுத்திய ஒரு கூட்டு அரசியல்முறை (Federal State) அமைக்கப்பட்டது. அமெரிக்கநாட்டு அரசியல்முறையில் இன்னொரு வேறுபாடும் உண்டு. அரசியலின் கூறுகளாகிய சட்ட அமைப்பு, வழக்கு நடைமுறை, அரசியல் நடைமுறை ஆகிய மூன்றும் அமெரிக்க அரசியலில் வேறுவேறு தனிப்பட்ட பகுதிகளாகத் தற்சார்புடையனவாய் விளங்குகின்றன. இங்கிலாந்திலும் அமெரிக்கர் குடியேற்ற நாட்களில் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் இருந்தது, நீதி நடைமுறை இன்றளவும் இங்கிலாந்தில் பெரும்பாலும் அரசியல் நடைமுறைப்பகுதிக்குக் கட்டுப்படாதிருக்கிறதாயினும் அத்துறையிலும் அரசியல் மன்றின் நிலை எல்லாவற்றுக்கும் மேற்பட்ட உரிமைநிலையேயாகும். சட்ட அமைப்பு, அரசியல் நடைமுறை ஆகியவைபற்றியோ வெனில் ஹனொவரிய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அமைச்சர் குழு ஆட்சியில் இரண்டும் பெரும்பாலும் ஒன்றுபட்டுப் பின்னிக்கொண்டு விட்டன. ஆனால் அமெரிக்காவில் இந்நிலை ஏற்படவில்லை. காரணம் அமெரிக்கர் அரசியல் அமைப்பு ஏற்படுத்தும் காலத்தில் இங்கிலாந்திலும் அந்நிலை ஏற்படவில்லை என்பதே. மேலும் இந்நிலை பிற்காலத்திலும் ஏற்படுவதற்குப் பெரிய தடை ஒன்று உண்டாயிற்று. இம்மூன்று துறைகளும் தனித்தனி ஒன்றுடனொன்று சார்பற்று இருப்பதே உயர்வுடையது என்று மாண்டிஸ்க்யூ (Montesquieu) என்ற அறிஞர் கூறியிருந்தார். அமெரிக்கரிடையே இக் கருத்து வேரூன்றிச் செல்வாக்குப் பெற்றது. ஆங்கில ஆட்சினின்று விடுபட்ட தறுவாயில் தனி மனிதனாட்சி மீது |