மக்கள் மனக்கொதிப்பு மிகுதியாயிருந்தது. அமெரிக்காவில் தனி மனிதர், எவர் கையிலும் முழு உரிமைகளும் போய்விடாமல் பாதுகாக்க இந்நிலை உதவும் என அவர்கள் கருதினர். இங்ஙனமாக அமெரிக்காவின் அரசியலில் அரசியல் நடைமுறைத் துறைக்குத் தலைவர் நாட்டுத் தலைவர் (President) ; அவர் தலைமையின் கீழிருந்து அமைச்சரும் அரசியல் பணியாளரும் ஆட்சியை நடத்தினர். சட்டமமைக்கும் துறை காங்கிரஸ் (Congress) என்றழைக்கப்படும் அரசியல் மன்றின் இரண்டு அவைகளினிடமும் அவற்றின் அவைத் தலைவர் கையிலும் அமைந்திருந்தது. சட்ட நடைமுறை கூட்டுறவு அரசியலின் தலைமை, வழக்கு மன்றத் தலைவர் கையிலும் கூட்டுறவு வழக்கு மன்றம், துணை மன்றங்கள் ஆகியவற்றினிடமும் இருந்தது. இம் மூன்று கூறுகளும் அவற்றின் தலைவர்களும் மற்றக் கூறுகளுக்கோ தலைவர்களுக்கோ கட்டுப்பட்டவையாயிராமல் தற்சார்பும் தன்னாண்மையும் உடையவையாகவேயிருந்தன. எனவே ஆங்கில நாட்டைப் போல நாட்டுத் தலைவராகிய முதல் அமைச்சரோ அமைச்சர் குழுவோ அமெரிக்காவில் அரசியல் மன்றுக்குக் கட்டுப்பட்டு அதனிடம் பொறுப்பு வகிக்கவில்லை. ஓழுங்கு முறைப்படி கூட்டுறவுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குரிய கால எல்லை வரை அவர் ஆட்சி செய்வதை யாரும் தடுக்க முடியாது. அக் கால எல்லை கழிந்த பிறகோ, அவர் உலகு நீத்த பொழுதோதான் அடுத்த தலைவர் தேர்ந்தேடுக்கப்படலாகும். கூட்டு அரசியலிலுள்ள இதே நிலைதான் தனி அரசியலிலும் ஏற்பட்டது. நாட்டுத் தலைவர் நிலையில் இருந்தவர் |