தோன்றியுள்ளன. தொழிலாளர் குழு ஒருகட்சியாக முன்னணிக்குவரவில்லை. காரணம் அமெரிக்காவில் புதுக் காடுகள் நிறைந்திருப்பதால் அவற்றைத் திருத்திப் பயிரிடும் குடியானவர் பெருந்தொகையினர். தொழில்முதலாளிகள் பெருத்த கிழக்கு அரசியல் பகுதிகள் குடியேற்றக் கட்சியையும்; பண்ணை முதலாளிகள் குடியானவர் வாணிகக் குழுவினர் நிறைந்த தெற்கு, மேற்கு, வடமேற்கு அரயில் பகுதிகள் பொது ஆட்சியையும் ஆதரிக்கின்றன. இக்கட்சிகளே தனித்தனி யியங்கும் அரசியல்களையும் கூட்டுறவையும் ஒருபுறமும், சட்டஅமைப்பு மன்றங்களையும் நடைமுறை அரசியலையும் இன்னொரு புறமும் இணைக்க உதவுகின்றன. இவற்றின் முயற்சியால் முதலின் பெருநிலக் கிழவர் கையிலிருந்த அமெரிக்க அரசியல் இப்போது பெரும்பாலும் சிறுநிலக் கிழவர் கைக்கு மாறியுள்ளது. 7. ஐரோப்பிய ஆசிய நாடுகளின் அரசியல் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளின் அரசியல் வளர்ச்சி 18-ம் நூற்றாண்டு இறுதி வரையும் கிட்டத்தட்ட நார்மன் அரசர் ஆட்சித் தொடக்கத்தில் இங்கிலாந்திலிருந்த நிலைமையிலேயே இருந்தது. முதல் எட்வர்டு காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்டது போன்ற மும்மண்டலப் பிரிவு (தலைமக்கள் மண்டலம், பெருமக்கள் மண்டலம், பொது மக்கள் மண்டலம் என்ற பாகுபாடு) அதே சமயத்தில் ஃபிரான்சிலும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் ஆற்றல் மிக்க அரசர் ஆட்சிக் காலங்களில் அது கூட்டப்படாமலோ |