அல்லது டியூடர் அரசர் காலத்தில் இருந்தது போல் அரசர் கைப்பாவையாகவோ இருந்தது. எட்டாம் ஹென்ரியைப் போலவே தன்னாண்மை மிக்க அரசனாகிய பதினான்காம் லூயியின் ஆட்சியில் அது கூட்டப் பெறாமலே போயிற்று ஃபிரஞ்சுப் புரட்சியின் போது அது உருக்குலைந்து பலப்பல வெறித்த மாறுதல்களடைந்தது. ஃபிரான்சிலும் சரி, ஐரோப்பிய நாடுகள் பிறவற்றிலும் சரி, நெப்போலியன் ஆட்சிக்கால அரசியல் புயலிற்பட்டு இப்பழைய அரசியல் முற்றிலும் சீர்குலைவுற்று அழிந்து போயிற்று. ஐரோப்பாவில் ஏற்பட்ட தற்கால அரசியல் முறைகள் எல்லாமே இந்நெப்போலியன் காலப் புரட்சிக்குப் பிற்பட்டனவேயாகும். அப்புரட்சியிற்பட்டு அழியாமலும் வெளிப்டையாகவேனும் அதன் தாக்குதலுக்கு உட்படமாலும் இருந்த அரசியல், பிரிட்டிஷ் அரசியல் ஒன்றே. எனவேதான் அவையனைத்தும் வெளியமைப்பிலேனும் இங்கிலாந்தின் அரசியலைப் பின் பற்றியவையாயுள்ளன. அவற்றுட் காணும் பொது ஒற்றுமை இரு அவைகள் இருப்பதும், நடைமுறைகள் பெரிதும் மேலீடாக ஒத்திருப்பதுமே யாகும். ஆயினும் அவை ஒன்றிலேனும் மேலவை இங்கிலாந்தைப் போல வழிவழிப் பிறப்புரிமை உடையது அன்று. ஃபிரான்சு, பெல்சியம், ஹாலந்து, ஸ்வீடன் முதலிய நாடுகளில் மேலவை உறுப்பினர் கீழவையைப் போலவே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். நார்வேயில் அது கீழவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருகுழு ஆக அமைந்துள்ளது. இத்தாலியிலோ அதன் உறுப்பினர் மன்னரால் கீழவைக்குப் பொறுப்புடைய அமைச்சர் அறிவுரையுடன் வாழ்நாள் முழுமைக்குமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் |