மேலும் ஃபிரான்சு, இத்தாலி, பெல்சியம் ஹாலந்து ஆகிய நாடுகளில் பிரிட்டிஷ் அரசியலின் வெளியுருவம் மட்டுமல்லாமல் ஓரளவு அதன் தன்மைகளும் காணப்படுகின்றன. இத்தாலியிலும் பெல்சியத்திலும் ஹாலந்திலும் இங்கிலாந்தைப் போலவே முடியாட்சி ஏற்பட்டுள்ளன. முதலிரண்டும் மன்னராலும் இறுதிநாடு அரசியாலும் ஆளப்பட்டு வருகின்றன. இவற்றுள் அரசரோ அரசியோ இங்கிலாந்து மன்னரைப்போலவே கீழவையில் பெரும்பான்மைக்கட்சியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பொறுப்புடைய அமைச்சர் குழுமூலம் ஆளுகின்றார். எனவே அந்நாடுகளின் ஆட்சி பொறுப்பு வாய்ந்த முடியாட்சி 1 ஆகும். ஃபிரான்சிலும் அரசனுக்கு இணையாக இடம்பெற்றுள்ள தலைவர் இதுபோலவே பொறுப்புடைய அமைச்சர் குழுமூலம் ஆட்சி செலுத்துகின்றார். எனவே அதுவும் பொறுப்பு வாய்ந்த குடியாட்சியே யாகும். ஆனால் மேற்கூறிய நாடுகளுக்கு மாறாக (நாசியர் ஆட்சிவரை) செர்மனியிலும் ஆஸ்ட்ரியா ஹங்கேரியிலும் (நாளதுவரை) ஸ்விட்சர் லாந்திலும் பிரிட்டன் போன்ற பொறுப்பாட்சி இல்லை. அதோடு அரசியலமைப்பின் மாதிரியும் இங்கிலாந்தைப்போன்ற தனியரசியல் முறையா யிராமல் அமெரிக்காவைப்போன்ற கூட்டுறவு அரசியல் முறைகளாயிருக்கின்றன. கூட்டுறவு வகைமட்டும் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு முறையில் வேறுபட்டு இருக்கின்றது. கிரீஸ் 20-ம் நூற்றாண்டளவும் தனிப்பட்ட அரசியல் வாழ்வை இழந்து முதல் உலகப் போருக்குப் பின் விடுதலை பெற்று ஆங்கில அரசர் நிலையை ஒத்த அரசர் ஆட்சியைப் பெற்றது. 1 Constitutional monarchy |