1878-முதல் 1918-வரை 40 ஆண்டுகளாக செர்மன் அரசியல் உலகிலேயே மிக உறுதி மிக்க அரசியலாகக் கருதப்பட்டுவந்தது. அதற்கேற்ப அதன் ஆட்சிக் காலத்தில் செர்மனி ஆற்றலிலும் செல்வத்திலும் நாகரிகத்திலும் உலகில் முதலிடம் பெறும் நிலைக்கு ஓங்கி வளர்ந்தது. ஆயினும் அதில் உண்மையான பொறுப்பாட்சி மிகக் குறைவு. உருவில் அமெரிக்க அரசியல் போன்றதாயிருப்பினும் அது முற்றிலும் பேரரசர் கைக் கருவியாகவே இருந்தது. 1914-ல் தொடங்கிய முதல் உலகப் போர்க் காலத்தில் பேரரசர் பிடிதளர்ச்சி யடையத் தளர்ச்சியடைய அதன் வலுவும் குறைந்து 1918-ல் அது வீழ்ச்சியடைந்தது. அதன் பெரும் சிறப்புக்களுள் ஒன்று. அது ஒரு நாட்டு மக்கள், அல்லது ஒரு அறிஞர் குழுவின் முயற்சியால் எழுந்ததன்று. ஒரு தனி மனிதன் அதாவது பிஸ்மார்க்கின் அறிவுத் திறத்தால் எழுந்து உலகை இரண்டு தலைமுறையளவும் ஆட்டி வைத்ததே அதன் பெருமையாகும். ஆட்சி முறையினும் அதனைப் பிற பேரரசுகளுடன் நன்கு ஒப்பிடலாம். அமெரிக்க அரசியலைப் போலவும் இந்தியாவில் 1918-ல் எற்பட்ட அரசியலைப் போலவும் செர்மன் அரசியலும் இரட்டையாட்சித் துறைப்பட்டதாகும். அரசியல் காரியங்கள் கூட்டுறவுத் துறைகள் எனவும் தனி அரசியல் துறைகள் எனவும் வகுக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டுறவு, வெளிநாட்டு வாணிகம், நிலப்படை, கடற்படை, வரிப்பிரிவு, நாட்டுக் கடன், பொருள் நிலையங்கள், தொழிலமைப்பு, ஆராய்ச்சித் துறைகள், பத்திரிகைக் கட்டுப்பாடு ஆகியவை கூட்டுறவுத் துறைகள். சட்டமமைத்தல், வழக்குகள் ஆகியவையும் பெரும்பாலும் கூட்டுறவுத் துறைகளே. |