1867-ம் ஆண்டுச் சட்டப்படி கூட்டுறவு அரசியலாயிற்று. நியூபவுண்ட்லந்து என்ற தீவு கானடாவுக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது. ஆயினும் அது கானடாக் கூட்டுறவுடன் சேராமல் தனி அரசியலாகவே இன்னும் இயங்குகின்றது. கானடாவை யடுத்து ஆஸ்ட்ரேலியா 1900த்திலும் தென் ஆபிரிக்கா 1909-லும் கூட்டுறவுகளாயின. நியூபவுண்டுலாந்து கானடாவுடன் சேராமல் தனித்து நின்றது போலவே நியூசிலாந்து என்ற தீவுக்கூட்டம் ஆஸ்திரேலியக் கூட்டுறவுடன் சேராமல் தனி அரசியலாக நிலவுகிறது இக் குடியேற்ற நாட்டின் அரசியல் முறை பெரிதும் அமெரிக்க அரசியல் முறையைப் பின்பற்றியே கூட்டுறவு முறையில் அமைந்துள்ளன, ஆயினும் அமெரிக்க அரசியலுக்குச் சிறப்பான பண்பு கூட்டுறவு அரசியலைவிட உறுப்புக்களான தனி அரசியல்களுக்கு மிகுதி உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன என்பதே, உண்மையில் கூட்டுறவு அரசியலின் உரிமைகள் மட்டிலுமே வரையறுக்கப்பட்டு அவை போக மீந்த உரிமைகளனைத்தும் வரையறையில்லாமல் தனி அரசியல்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன, குடியேற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்று மட்டும் அமெரிக்காவின் நிலைமையை முற்றிலும் பின்பற்றியது, அங்கும் வரவரமேல் அரசியலின் உரிமைகளையே வலியுறுத்தும் போக்குக் காணப்படுகிறது, கானடாவிலோ தனி அரசியல்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. மீந்த உரிமைகள் அனைத்தும் கூட்டுறுவையே சார்ந்தவை. தென்ஆபிரிக்காவில் அரசியல் பெயரளவில்தான் கூட்டுறவு அரசியல். உண்மையான உரிமைகள் பெரிதும் மேலரசியலையே சார்ந்துள்ளன. |