கான ஆண்டுகளாக ஊறிய அடிமைத்தனம், முயற்சியின்மை, ஆன்மிக அறிவில் தோய்ந்து பெற்ற முப்பொருளுண்மை முடிவுகள் (பதி, பசு, பாசம் அல்லது சத்துச் சித்து ஆனந்தப்பாகுபாட்டுணர்வு) ஆகியவையும் பொதுக்கலை, இலக்கியம், மொழி இயல்பு ஆகியவையும் இப்பெரு நிலப்பரப்புக்கு அடிப்படையில் பரந்த ஒற்றுமையும் தனித்தன்மையும் தருபவை ஆம். இவ்வடிப்படை ஒற்றுமைக்குக் காரணம் என்ன? இப்பரப்பு முற்றும் இன்று பலவகையில் சிதறுண்டு கிடந்தாலும், நாகரிகத் தொடக்கத்தில் ஓரினம், ஒரு மொழி, ஒரே பண்பு உடையதாய் விளங்கியதேயாகும். அப்பண்பே ஆரியரல்லாதார், அல்லது சிறப்பாகத் திராவிடர் பண்பு ஆகும். இன்றைய இந்தியாவில் கண்ட உடற்கூறுகள், சமயமுறைகள், நாகரிகம் ஆகிய எல்லாவற்றின் கருநிலைகளும் மொகஞ்சதரோ ஹரப்பா ஆகியவற்றில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களிடையே காணக்கிடக்கின்றன. அடிப்படையில் ஒற்றுமையை விளைவிக்கும் இத்திராவிடப் பண்பை மறந்து வேற்றுமை விளைவிக்கும். ஆரியப்பண்பை இந்தியாவின் உயிர்நிலையாகக் கொண்டதனால்தான் இந்தியாவை ஒரு நாடாகக் கொள்ளவோ ஆக்கவோ முடியவில்லை. ஆரியர் வரவுக்கு முந்தியே திராவிட இந்தியா நாகரிகத்துறைகளில் எவ்வளவோ மேலோங்கியிருந்ததாயினும் வீணையின் உட்கீறல்போல் உள்ளுற அதில் வேற்றுமைகள் வாழ்வியல் வேற்றுமைகள் மறைந்து கிடந்தன வென்றும், அவற்றின் பயனாகவே ஆரியர் எளிதில் இப்பரப்பில் முன்னேறினர் என்றும் முன்பிரிவுகளில் கூறினோம். ஒற்றுமையும் இன உணர்வும் அற்ற இப்பெருங் |