பிரிட்டஷ் ஆட்சியின் வாய்ப்புக்களை ஒட்டியும் ஏற்பட்ட செயற்கைப் பிரிவுகளேயாகும். மொழி, கலை, பொருள் நிலை, இனம் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒட்டிய பிரிவினை வேண்டுமென்ற அவா அண்மையில்தான் எழுந்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண ஆட்சியை அமெரிக்கா முதலிய கூட்டுறவு ஆட்சியுட்பட்ட தனியரசுகளுக்கும், தலைமை ஆட்சியைக் கூட்டுறவு அரசியலுக்கும் ஒரு வாறு ஒப்பிடலாம். ஆனால் தொடக்கத்தில் தனி அரசுகளின் உரிமைகள் குறைவு. தலைமை அரசுக்கு உரிமை கூடுதல். அதுமட்டுமன்றி அவ்வுரிமை முற்றும் பிரிட்டனிலுள்ள இந்தியா அமைச்சர் இணக்கத்திற்கு உட்பட்டது. இந்தியா அமைச்சரோ மன்னருக்கும் மன்னர் சார்பில் பிரிட்டிஷ் அரசியல் மன்றுக்கும் பொறுப்பு உடையவர். இவ் அரசியல் முறையில் நடைமுறைத் தலைவர் எவரும் மற்றக் குடியாட்சியின் ஆட்சியாளர்களைப்போல் கீழ் நோக்கி ஆட்சிக்கு உட்பட்ட பொது மக்களைக் கவனிப்பதில்லை. படிப்படியாக மேல் நோக்கித் தம்மினும் உயர்ந்த ஆட்சியாளரையும் முடிவாகப் பிரிட்டனில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசியல் மன்றையும் கவனிப்பவர்களாகவே அவர்கள் அமைந்துள்ளனர். ஆகவே இந்தியாவின் இவ் ஆட்சி முறையை அரசியலறிஞர் குடியாட்சி என்றோ பொறுப்பாட்சி என்றோ கூறுவதற்குச் சற்றும் இடமில்லை. அதனை நேர்மையான வல்லாட்சி என்றோ, வல்லுநர் ஆட்சி என்றோ, படி முறை ஆட்சி என்றோதான் கூறுமுடியும். இம்முறை 1935 அரசியல் சீர்திருத்தத்தின் பின்கூட மாறாமலே இருந்து வருகிறது. |