இந்தியா அமைச்சர் பிரிட்டிஷ் அமைச்சர் குழுவினுட்பட்ட ஒரு அமைச்சர். எனவே, அவர் மற்ற பிரிட்டனின் அமைச்சர்கள் போலவே முதலமைச்சரைக் கலந்து மன்னரால் அமர்த்தப்படுபவர். இந்திய முதல் தலைவரும் அது போலவே முதலமைச்சர் துணைகொண்டு மன்னரால் ஐந்தாண்டுக்காலத்துக்கு அமர்வு பெறுபவர். அவருக்குத் துணையாக நடைமுறைக் கழகம் ஒன்றும் சட்டமன்றம் ஒன்றும் இருந்தன. நடைமுறைக் கழகத்தின் உறுப்பினர் ஆட்சித் தலைமை நிலையத்துடன் கலந்து மன்னர் ஆட்பெயரால் அமர்த்தப்பட்டனர். அவர்கள் தொடக்கத்தில் முற்றிலும் ஐரோப்பியரே. சட்டமன்றத்திலும் பெரும்பாலும் ஐரோப்பியரே. இவ் அரசியல் மன்றும் தேர்ந்தெடுக்கப் பட்டதன்று. சட்டங்கள் ஏற்படுத்தும் உரிமை அதற்கிருந்ததாயினும் அவ்வுரிமை பிரிட்டிஷ் அரசியல் மன்றத்திற் கடங்கியதேயாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவில் போரோ கலவரமோ மிகுதியின்றி அமைதி நிலவிய காலம். நடந்த ஒரு சில போர்களும் நாட்டைத் தாக்காத முறையில் வடமேற்கு எல்லையிலும் பர்மாவிலும் நடந்தவையே. அரசியல் வாழ்விலும் படைவீரர் கிளர்ச்சி போன்ற எழுச்சி எதுவும் பிரிட்டிஷ் அரசி ஆட்சியேற்றபின் ஏற்படவில்லை. நாட்டின் பழைய குடித் தொழில்கள் பொறிவகை மேம்பாட்டினால் அழியினும், பொதுப்பட வாணிகம் மேம்பட்டு வந்தது. பழைய பழக்கவழக்கங்களில் மிகக் கொடியவை எனத் தோன்றிய உடன்கட்டை முதலிய சில அகற்றப்பட்டன. இந்தியா முழுமைக்கும் ஒரேவகையான பொதுவழக்கு நடைமுறைச்சட்டம், குற்றவழக்கு நடைமுறைச்சட்டம், குற்றச்சட்டம் ஆகியவை தொகுக்கப் |