தரவுரிமை ஆகியவை கோரினர். சமயவிடுதலை பெறாது தம்மை இந்து என்றும் ஆரியரென்றும் நம்பிய திராவிட இனத்திலும் சமயவிடுதலைபெற்ற இம்முஸ்லிம் திராவிட இனம் வலிமையுடையது என்று கண்ட ஆரிய இந்துக்கள் அவர்களுக்குத் தனித்தொகுதி, தனிமொழித்தரவுரிமை ஆகியவை தந்து தம் வயமாக்க முயன்றும் விழிப்படைந்த முஸ்லிம்கள் நாளடைவில் தனிநாடு வகுப்பதிலேயே முனைந்து நின்றனர். 1919-ம் ஆண்டுச் சட்டம் தற்காலிகமுறையாகத் தரப்பட்ட தென்றே அரசாங்கம் கொண்டது. எனவே பத்தாண்டுக்கு ஒருமுறையாகப் பிரிட்டிஷ் அரசியல் மன்ற அவைகளின் இணைந்த குழு ஒன்று அனுப்பப்பட்டது. அது கண்டறிவித்த அறிக்கைப்படி சீர்திருத்தம் புதுப்பிக்கப்படவேண்டும் என்ற வாசகம் அச்சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதன்படி 1928-ல் ‘சைமன் குழு’ என்று பெயர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் ஐரோப்பியர் அல்லாதார் இடம்பெறாததால் நாட்டுரிமைக் கழகமும் பிறகட்சிகளும் அதனை எதிர்த்தன. தென்நாட்டு நாட்டுரிமைக் கட்சியில் மேலோங்கிய பார்ப்பனர்களை எதிர்ப்்பதில் முனைந்த நேர்மைக்கட்சி ஒன்று மட்டுமே அதனை வரவேற்றது. இதனையடுத்து நாட்டுரிமைக் கட்சியும் முஸ்லிம் குழாமும் முழுவிடுதலையை (அதாவது பிரிட்டிஷ் பேரரசைச் சாராது தனியாட்சி நிறுவுவதை)க் கொள்கையாக ஏற்றன. முன்னையை கட்சி 1930-31-ல் சட்டமறுப்பு இயக்கத்தில் முனைந்து நாட்டார்வத்தின் பேரால் வளர்ச்சியுற்றது. முஸ்லிம் குழாமும் முஸ்லிம்களைத் தட்டியெழுப்பி முஸ்லிம் பொதுமக்களிடையே பெருத்த ஆதரவுபெற்றது. |