முப்பெருங்கிளைகளே. முதலில் எழுச்சிபெற்று வீறுடன் தனிநாடு வேண்டிய கிளைஇனம் சமயவகையில் ஆரியப் பூச்சுக்குட்பட்ட திராவிட சமயத்தினின்று விடுதலை பெற்ற முஸ்லிம் இனமேயாகும். அது நாட்டுரிமைக் கட்சியுடன் போராடுமளவு சரிநிகர் வலிமைபெற்று விளங்குகிறது. தமக்கென அவ்வினம் தெய்வநாடு (பாகிஸ்தான்) என்ற தனி நாடு கோரி நிமிர்ந்து நிற்கின்றது. அடுத்தபடி தென்பகுதியில் சிலர் பழய நேர்மைக்கட்சியிடையே முனைந்து நின்ற முற்போக்குக் கிளைக்கட்சிக்குத் திராவிடர் கழகம் எனப் புதுப்பெயர் சூட்டித் திராவிடநாடு கோரி நிற்கின்றனர். முஸ்லிம்களைப்போல் சமயவிடுதலையும் பெறாமல் திராவிடர்போல் வாழ்வியல் உரிமையும் பெறாமல் ஆரியர்க்கும் ஆரியர் வயப்பட்டு அவர்களுடன் ஒன்றுபட்ட வடநாட்டுத் திராவிடக் கலப்பினத்தாரான போலி ஆரியர்க்கும் அடிமைப்பட்டு நின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தனித்து உரிமைபெற முயன்று வருகின்றனர். அரசாங்கம் அவர்கள்மேல் அருளிரக்கம் காட்டி வருகிறதாயினும் அவர்களை உயர்த்துவதற்காகப் பிற இனங்களைப் பகைக்கத் துணியவில்லை. நாட்டுரிமைக் கட்சியில் ஆக்கம்பெறும் உயர்குடிச் செல்வரும் ஆரியரும் தம்முடன் சரிநிகர் நிலையில் போட்டியிட முடியாத அவர்களிடம் இரக்கம் காட்டிக் கொடை வழங்க முன்வரினும் வேற்றுமை யகற்றி உயர்த்தத் துணியவில்லை. திராவிடர் கழகமும் முஸ்லிம் குழாமும் அவர்களுடன் ஒத்துணர்வு கொள்ளினும் தத்தம் ஆக்கவேலைகளில் சிக்கிக் கிடக்கின்றன. அவர்கள் நிலைமைகளும் தாழ்த்தப்பட்டோரினும் மிகவும் வேறுபட்டவை. இந்நிலையில் இவ்வினம் இன்னும் தலை துக்கி யெழாதிருக்கின்றது. |