பக்கம் எண் :

172குடியாட்சி

   முதலிருபிரிவுகளில் குறித்தபடி இந்திய உலகம் அடிப்படையில் ஒரே திராவிடப் பண்புடையதாக இருப்பதால் ஒரே பரந்த பெருங்கூட்டுறவு ஆட்சிக்குரியதேயாயினும் அப்பண்பு சீர்கெட்டிருக்கும் இன்றைய நிலையில் தனித்தனி வாழ்வுபெற்றே ஒரே நிலை உயர்வும் ஒருமைப்பாடும் எய்தல் முடியும். சமய விடுதலையேனும் பெற்ற முஸ்லிம்கள் இதில் முன்னணியில் நிற்பது இயல்பே. வாழ்வியல் விடுதலையை ஓரளவு இழவாது கலை, நாகரிகத்துறையில் ஆரியருக்கு இன்னும் மேம்பட்டு நிற்கும் திராவிடர் கிளையான தமிழகத்தார் அடுத்தபடி தலைமை ஏற்பது உறுதி. அவர்களைப் பின்பற்றித் தம் இனப்பெயர் கூறக் கூசும் பிற திராவிடரும், தம் இனமறியா வடநாட்டுத் திராவிடரும் எழவேண்டும். தாழ்த்தப்பட்டவர் நிலையும் அதனினும் சிறப்பாக மலைநாட்டுமக்கள் (Hill tribes) நிலையும் உண்மையில் மேலைநாடுகளின் நீக்ரோவர், செவ்விந்தியர்நிலை போன்றவை. இவ்வியக்கங்கள் அவர்களையும் விழிக்கச் செய்து சரிநிகர்நிலை ஏற்படுத்தியபின் இவ்வெல்லா நாடுகளும் ஒரே அரசியலில் இணைதல்கூடும். அது வரை அவற்றின் தனிவளர்ச்சிகளைத் தடையாது தனித்தனி தேர்தல் தொகுதி (Separate Electorates) தனிப்பெயராண்மை (Special Representation) தனி ஆட்சி உரிமை (Separate Self Government) ஆகியவை பெறும்வகையில் கட்டுப்பாடற்ற பாதுகாப்பு அளிக்கும் அரசியல் முறையே நன்மை அளிப்பதாகும். அத்தகைய பெருமித நோக்குடைய அரசியல் அமைக்க உருசிய நாட்டின் அரசியல் நடைமுறை ஒரு பெரிய வழிகாட்டியாகும்