பக்கம் எண் :

குடியாட்சி173

10. உருசியப் பெருநாடும் பொதுஉடைமை ஆட்சியும்


   உலகுக்கு அரசியல் வகையில் படிப்பினை தரும் நாடுகளில் பிரிட்டனைவிட உருசியாவின் சிறப்புக் குறைந்ததன்று. ஏனெனில் பண்டைய ஆரியரல்லாதார் உலகிலிருந்து தற்கால உலக நாகரிக அரசியலுக்கு வருவதற்கான ஏணி பிரிட்டனானால், தற்கால உலகினின்றும் எதிர்கால உலகுக்குச் செல்லும் ஏணியின் முதற்படியாய் அமைந்துள்ளது உருசியா என்பதில் ஐயமில்லை. நம்நாட்டைப் பற்றியவரை உருசியாவினால் நமக்குக்கிட்டும் படிப்பினை பிரிட்டனால் கிடைப்பதைவிடப் பன்மடங்கு மேம்பட்டதே. ஏனெனில் சூழ்நிலையால் முன்னைய சிறப்புக்கள் இழந்து அலைக்கழியும் நம்நாடு மற்ற நாடுகளைவிடப் பிற்பட்டிருப்பதால் வளர்ச்சி முறையிலும் பிற்பட்டே செல்ல வேண்டுவதில்லை என்பதை உருசிய நாட்டின் வரலாறு காட்டுகிறது. எப்படியெனில் ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு முன்வரை உருசிய நாடு பலவகையில் நம் நாட்டின் நிலையிலேயே இருந்தது. பிரிட்டன் முதலிய மேலை நாடுகளால் கைக்கொள்ளப்பட்ட ஆசிய நாடுகளைவிட அது பிற்பட்டது என்று கூறத்தக்க வகையிலேயே இருந்தது. எனவே முற்போக்கானவை என்று கூறப்படும் நாடுகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தைப் பிற்போக்கான ஒரு நாடு அவ்வளவு நாட்கள் காத்திராமல் விரைவிலேயே அடையக்கூடுமானால் முன் முற்போக்கடைந்த நம்நாடு ஏன் அத்தகைய முன்னேற்றம் அடைதல் முடியாது? முடியும் என்பதனையும் முடிவது அரிதாயின் அதன் காரணங்களையும் அந்நாட்டின் ஆராய்ச்சியால் நாம் அறியலாம் அன்றோ?