பக்கம் எண் :

குடியாட்சி175

உருசிய நாடும், உக்ரேனும், ஆசிய ஐரோப்பிய எல்லையில் காக்கசஸ் பகுதியும், ஆசியாவில் சைபீரியா, தராத்தாரி, (துருக்கிதானம்) மங்கோலியா ஆகியவையும் ஆகும். இவற்றுள் தொடக்கத்தில் உருசிய அரசர் ஆண்டது பால்டிக் முதல் யூரல் மலைவரையுள்ள உருசியப் பகுதியை மட்டுமே. படிப்படியாகப் பண்டைய உருசிய அரசர் ஐரோப்பிய உருசியா முழுமையும் வென்றனர். பின் எல்லைப்புறக் குடியேற்றங்கள் மூலப் பேரரசு காக்கசஸ் பகுதியிலும் சைபிரியாவிலும் கீழ்க்கோடி மங்கோலியாவிலும் பரந்தது. வேறுபட்ட இத்தனை நாடுகளையும் பேரரசர் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. பெருமக்கள், நாட்டுத்தலைவர்கள் ஆகியவர்கள் மூலமே அவர் ஆணை செலுத்தப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் உருசியா தார்த்தாரியர் எழுச்சியால் வலிகுன்றியது. நாகரிகமும் ஆசிய நாகரிகத்துடன் ஒன்றுபட்டு நின்றது. 15-16ம் நூற்றாண்டுகளில் பண்டைய ரோமப் பேரரசின் கீழ்ப்பகுதியில் பரந்த துருக்கியப்பேரரசின் முன்மாதிரியும் அங்கிருந்து பரந்த கிரேக்க கத்தோலிக்கக் கிளைச்சமயத்தின் ஆட்சியும் உருசியாவை ஐரோப்பிய நாகரிகத்தினின்றும் துண்டுபடுத்தின. உருசிய அரசு உருவில் வல்லாட்சியாகவும் ஆனால் ஐரோப்பிய வல்லாட்சியின் உறுதி இல்லாததாகவும் இருந்தது. இதனால் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய அரசியலறிஞர் ரஷ்யாவை ஐரோப்பிய அரசியலுடன் சேராது ஆசியப் பேரரசுகளுள் ஒன்றென்றே கணித்தனர். 18-ம் நூற்றாண்டில் பீட்டர் பெருமான் உருசியப் படைகளைத் திறம்படப் பயிற்றுவித்தும் நாட்டில் தம் ஆணையை வலியுறுத்தியும் ஐரோப்பிய நாகரிகத்தை நகரங்களிலேனும் பரப்பியும் இந்நிலையை ஒரு சிறிது மாற்றினார்.