இந்நிலையிலிருந்து 19-ம் நூற்றாண்டில் உருசியப் பேரரசு சிறிது சிறிதாகத் தலைதூக்கி ஐரோப்பிய அரசியலில் பங்கு கொள்ளத் தொடங்கிற்று. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவெங்கும் கிட்டத்தட்டத் தன் பிரஞ்சுக் கொடியை நாட்டிய நெப்போலியன் (பிற்கால ஹிட்லரைப் போலவே) பிரிட்டனைத் தாக்குமுன் இறுதிப் படியாக உருசியாவைப் படையெடுத்து அதன் பயனாகத் தானே வலிகுன்றி வீழ்ச்சியடைந்தான். இதனால் உருசியாவின் பெயர் ஐரோப்பிய அரசியலில் சற்று மதிப்புப் பெற்றது. எல்லையற்ற தன் பரப்பின் காரணமாகவும் தனித்த நிலஇயல் தட்ப வெப்ப இயல் காரணமாகவும் உருசியாவை எவரும் எளிதில் வெல்வது அரிது என்ற எண்ணம் பரந்தது. ஐரோப்பாவெங்கும் 18-ம் நூற்றாண்டுவரைப் பரந்திருந்த நில உடைமைப்படிமுறை ஆட்சி (Feudalism) உருசியாவில் 19-ம் நூற்றாண்டிலும் அழியாதிருந்தது. அதனை இரண்டாம் அலக்சாண்டர் பேரரசன் (1859-1866) ஓரளவு அடக்கி ஒடுக்கினான். அதோடு ஐரோப்பிய அரசியல்களில் கண்ட குடியாட்சியின் உள்ளீடுகளில் தேர்தல் அவைகள் அமைத்தல், அமைச்சர் குழு அமைத்தல் முதலிய முறைகளை மேலீடாகப் புதிதாக ஏற்படுத்தினான். ஆயினும் தேர்தல் தொகுதி மிகவும் குறுகலாகவும் அவைகளின் உரிமை குறைவாகவும் இருந்தன. அமைச்சர் அரசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கைக் கருவிகளாயிருந்தனர். இந்நிலையிலும் கூடப் பின்னைய பேரரசர் இவ்வரசியலின் பேரையே வெறுக்கும் அளவுகுப் பிற்போக்காளராயிருந்தனர். |