பக்கம் எண் :

குடியாட்சி177

அலக்சாண்டரின் இப்புது முயற்சி ஒருவகையில் பயனளித்தது. ஐரோப்பாவில் கார்ல்மார்க்ஸ் பரப்பி வந்த கருத்துக்கள் அரசியல் வளர்ச்சியுற்ற மற்ற நாட்டு மக்கள் மனத்தைவிடப் பிற்பட்ட அரசியல் வளர்ச்சியுடைய உருசிய மக்கள் இதயத்தை மிகுதியாகக் கவர்ந்தன. அரசாங்கம் பிற்போக்கில் உறுதியடைய அடைய முற்போக்கு மனப்பான்மை கொண்ட பொதுமக்கள் வெறித்த முற்போக்குக் கட்சியுடன் இணைய இடமேற்பட்டது.

   1905-ல் உருசியப் பேரரசு கீழ்நாட்டின் புதிய வல்லரசாகிய சப்பானுடன் போரிட்டு முழுத்தோல்வியடைந்தது. இதனால் பெருங்குடி மக்கள் ஆதரவில் நடைபெற்ற பேரரசர் ஆட்சி மீது வெறுப்பு, மிகுதியாயிற்று. அதனை அடக்க முயன்றும் பயனற்றுக் குழப்ப நிலை ஏற்படவே வேண்டாவெறுப்பாகக் குடிமன்றங்கள் அமைத்து முன்போல் குடியாட்சி உருவில் வல்லாட்சி செலுத்தும் முயற்சி ஏற்பட்டது. மன்றங்களுக்கு முன்போல் உண்மை உரிமை எதுவும் தரப்படாவிடினும், கார்ல்மார்க்ஸ் கொள்கைப் பரப்பினால் ஆண்டுநிரம்பிய மக்கள் அனைவருக்கும் மொழிதர வேண்டியதாயிற்று. மன்றங்கள் மிகவும் முனைத்த முற்போக்குடையவையாய், தம் உரிமை எல்லைகளை மதிக்காமல் அமைச்சரை எதிர்க்கவும் புரட்சிகரமான திட்டங்கள் வகுக்கவும் தொடங்கவே, மிகுந்த எதிர்ப்புக் கிடையில் வல்வந்தமாக அவைகளைக் கலைக்க வேண்டியதாயிற்று.

   அதன்பின் முன்போல் ஆண்டு நிரம்பிய அனைவரையும் உட்படுத்தாது செல்வக்குடியினர்க்கு மட்டும் பேராதரவுடைய குறுகியதொகுதி மூலம் அவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிலகாலம் இச்செல்வர் அவைகள் உருசிய ஆட்சிக் கடங்கி நல்ல பிள்ளைகளாய் ஒத்துழைத்து வந்தன.