பக்கம் எண் :

18குடியாட்சி

தொடர்புடையது என்று இன்னும் வரையறுத்துக் கூற முடியவில்லை. மொகெஞ்சதரோவில் கண்ட பழைய சிந்து நாகரிகம் மட்டுமே தெள்ளத்தெளியத் திராவிட நாகரிகம் என்று தெரியவருகிறது. ஆரிமயமல்லாத நாகரிகங்களுள் திராவிட இனநீங்கலாகமற்றவற்றை ஒன்றிரண்டு இனங்களாகப் பிரிக்கலாம். அராபியர், எகிப்தியர், மேலை ஆசிய மக்கள், ஆபிரிக்காவின் பழைய அராபிக் குடிகள் ஆகியவர்களும் ; எபிரேயர் (யூதர்கள்) பினீசியர், கார்த்தகினியர் ஆகியவர்களும் ; செமித்தியர் அல்லது நடு உலகமக்கள் என்ற பெரும் பிரிவிற்படுவர். திராவிடர் கூட இவ்வினத்துடன் சார்ந்தவரே எனப் பலர் கொள்கின்றனர். ஐரோப்பாவிலுள்ள ஸலாவியர், ஹங்கேரியர், பின்லாந்தியர் முதலியவர்கள் ஒருபுறமும் ஆசியாவில் துருக்கியர், துருக்கித்தானர், சீனர், திபேத்தியர், சப்பானியர், கொரியர், பர்மியர் ஆகியவர்களும் சித்தியமங்கோலிய இனம் என வகுத்துரைக்கப்படுகின்றனர். இந்தியாவில் திராவிடர் தனித்து நிற்பதுபோல் இத்தாலியில் பழைய எட்ரஸ்கானரும், அமெரிக்காவில் பெருவியரும் மயரும் தனிப்பட்ட குழுவினராகக் காணப்படுகின்றனர். இவர்களனைவரும் ஒவ்வொருவகையில் திராவிட இனத்துடன் உறவுடையவராயிருப்பது நோக்க, இவ்வனைவருமே ஒரு பேரினத்தவர்தாமோ என்று ஐயுற இடமுண்டு. ஆயினும் இது முடிவாகக் கூறமுடியாத செய்தியாதலானும், கால்டுவெல் போன்ற அறிஞர் ஆரிய இனம் கூட இப் பெரும்பேரினம் நாகரிகவளர்ச்சிபெறாத காலத்தில் இதினின்றும் பிரிந்துபோன கிளையினம் என்று கருதுவதாலும், இங்கே இவர்களனைவரையும் ஆரியர் என்றும் ஆரியரல்லாதார் என்றும் பொதுப்படக் குறிப்போம்.