களாகவே கொண்டு நேச முறையில் உடம்படிக்கை செய்து கொண்டு கூட்டரசியலாயிற்று. இக் கூட்டுறவில் முதலில் சேர்ந்து குடியரசுகளான நாடுகள் (1) உருசியக் குடியரசு (2) உக்ரேனியக் குடியரசு (3) வெள்ளை உருசியக் குடியரசு (4) துர்க்மெனிஸ்தர்க் குடியரசு (5) உஸ்பெக் குடியரசு (6) தட்ஜிசிஸ்தன் குடியரசு (7) திரான்ஸ்கக்கேசியக் கூட்டுறவுக் குடியரசு ஆகியவை. பால்டிக் நாடுகளும் கருங்கடல் ஒரத்திலுள்ள பெஸ்ஸரேபியாவும் புரட்சிக் காலத்தில் தனியாய்ப் பிரிந்துவிட்டன. அவற்றுள் இரண்டாம் உலகப் போருக்கு முன் பால்டிக் நாடுகள் உருசியாவால் வெல்லப்பட்டுப் பொது உடைமை ஆட்சியில் சேர்க்கப்பட்டன. பெஸ்ஸரேபியா ருமேனியாவிடம் சேர்க்கப்பட்டுப் பின் மீட்கப்பட்டது. சைபீரியா, துருக்கித்தான், மங்கோலியா முதலியவை படிப்படியாகக் கூட்டுறவில் சேர்க்கப்பட்டன. ஐரோப்பியக் குடியாட்சி நாடுகளைப் போலவே உருசியாவிலும் தேர்தல்களும் அரசியலவைகளும் நடை முறைக் குழுக்களும் ஆட்சித்தலைமையும் அமைந்துள்ளனவாயினும் பல அடிப்படையான செய்திகளில் உருசிய அரசியலமைப்பு வேறுபடுகிறது. இவற்றுள் முதல் வேறுபாடு உருசியப் புரட்சி ஐரோப்பியப் புரட்சிகளைப் போல் வெறும் அரசியல் புரட்சியாயிராமல் வாழ்வியலையும் பொருளியலையும் முற்றிலும் மாற்றி மக்கள் வாழ்க்கையில் புரட்சியமைத்து அதன் மீதே அரசியல் புரட்சி வகுத்தது ஆகும். ஐரோப்பிய அரசியலறிஞர் இதனைக் குடியாட்சிக்கு மாறுபாடானதெனவும் மனித உரிமைகளை மறுப்பதெனவும் கொடுமையும் குருதி சிந்தலும் |